லைஃப்ஸ்டைல்
ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டுகளால் கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்

Published On 2020-09-21 03:18 GMT   |   Update On 2020-09-21 03:18 GMT
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.
கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நினைத்து பெரும்பாலான பெற்றோர்கள் இப்போது சந்தோஷப் படுகிறார்கள். ‘அடிதடி இல்லாமல் அமைதியாக இருந்து பிள்ளைகள் விளையாடுகிறார்கள்’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்களால், பள்ளிக்கூடம் திறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதுதான் அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும். மொபைல் போன் கேம்ஸ், கிட்டத்தட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் தகர்க்கும் விளையாட்டாகும்.

இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.

விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.

திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.

‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.

இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.
Tags:    

Similar News