லைஃப்ஸ்டைல்
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Published On 2020-09-10 06:45 GMT   |   Update On 2020-09-10 06:45 GMT
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் குழந்தைகளோடு பழகுகிறவர்கள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்றாலும், மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. பெண்குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பெருமளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.

சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.

சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.

இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.

சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
Tags:    

Similar News