லைஃப்ஸ்டைல்
குழந்தையின் காய்ச்சலை கவனிக்கும் தாய்

காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்

Published On 2020-05-28 03:15 GMT   |   Update On 2020-05-28 03:15 GMT
காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக குழந்தைகளை தங்கள் தீவிர கண்காணிப்பில் பெற்றோர் வைத்துள்ளனர். வீடுதோறும் ‘டிஜிட்டல் தெர்மாமீட்டர்‘ வைத்தும் பரிசோதனை மேற்கொண்டும் வருகிறார்கள்.
கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா வைரஸ் ஒவ்வொருவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி பார்த்து வருகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் என்னதான் நடவடிக்கைகளை முன்னிறுத்தினாலும், மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால் அவை விழலுக்கு இறைத்த நீராகவே இருக்கிறது.

குறிப்பாக சென்னையில் கொரோனாவின் கோர தாண்டவம் தலைவிரித்து ஆடுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. கால்பட்ட இடமெல்லாம் கண்ணிவெடி என்பது போல, திரும்பும் திசையெங்கும் கொரோனாவின் பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

காய்ச்சல் என்றாலே கொரோனா என்பது போல கொரோனாவின் பீதி அனைத்து இடங்களிலும் மேலோங்கி இருக்கிறது, ஆஸ்பத்திரிகள் உள்பட கடந்த 2 மாத காலமாகவே பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், இருமல், தும்மல், சளி பிரச்சினை உள்ளவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அது குழந்தைகளாக இருந்தாலும் கூட... பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் என்ன நோயாக இருந்தாலும் சரி, முதலில் காய்ச்சல், இருமல் பரிசோதனை முடிந்தபிறகே உள்ளே நுழைய அனுமதிக்கிறார்கள்.

பல ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் என்றாலே வரவேண்டாம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுங்கள் என்று ஒரேயடியாக கூறிவிடுகிறார்கள். மருந்துகடைகளில் சாதாரண காய்ச்சலுக்கு கூடமருந்து வாங்க முடியவில்லை.

இதனால் குழந்தைகளின் உடல்நலனில் முன்பைவிட பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரையேபருக தருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உண்பதற்கு தருகிறார்கள். கொரோனா பீதியால் அனைத்து வீடுகளிலின் வாசலில் கிருமிநாசினி டப்பாக்கள் இருப்பது போல, ஒவ்வொரு வீடுகளிலும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் குழந்தைகள் வந்துள்ளனர்.

விடுமுறை இருந்தும் விளையாட முடியாத நிலையில் குழந்தைகளும், 24 மணிநேரமும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களும் இருக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி உள்ளது.
Tags:    

Similar News