லைஃப்ஸ்டைல்
பாரம்பரிய விளையாட்டுகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..

Published On 2020-05-25 04:40 GMT   |   Update On 2020-05-25 04:40 GMT
ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்த பெயர்களை கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை. பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா? பழமா?, உப்பு விளையாட்டு என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமிகளுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என பல விளையாட்டுகள் இருந்தன. சிறுவர்-சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டு விளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற விளையாட்டுகளும் உண்டு.

ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிக்கட்டு, சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என விளையாட்டுகள் இருந்தன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

ஆனால் நாளடைவில் நாம் பண்டைய விளையாட்டுகளை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு 1, 2, 3 என சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும். பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது அது சுழலவில்லை எனில் அந்த பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். ஆடுபுலி ஆட்டம் என்பது திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்த கட்டங்களை சுண்ணாம்புக்கட்டி பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்களை அதில் வைத்து நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. மேலும் கள்ளன் வாரான் கண்டுபுடி, பூப்பறிக்க வருகிறோம் உள்பட பல விளையாட்டுகள் உள்ளன.

சுப்புலட்சுமி, 5-ம் வகுப்பு,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

மண்குண்டாம்பட்டி, தாயில்பட்டி.

Tags:    

Similar News