லைஃப்ஸ்டைல்
பெண் குழந்தை வளர்ப்பு

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா?

Published On 2020-05-14 04:31 GMT   |   Update On 2020-05-14 04:31 GMT
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. கலாச்சார சீர்கேடுகள் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிக அதிகமாகவே தேவையாகிறது. குறிப்பாக பெண் குழந்தையின் வளர்ப்பில் அன்னைக்கு நல்ல விழிப்புணர்வும், தெளிவான மனநிலையும் மிகமிக அவசியம். அப்படி இல்லாதவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு இது போன்ற சம்பவங்களே ஆதாரம்.

பதினைந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அழகிய இளம் மொட்டு பொன்மணி. பெயருக்கு ஏற்றவாறு கரும்பொன்னாக பளபளவென மின்னுபவள். அது என்னவோ இந்த பெண் குழந்தைகளுக்கு பெரிய மனுசி ஆனவுடனே ஒரு தனி தோரணையும், பெருமையும் வந்து விடுகின்றன. அப்பா லாரி ஓட்டும் தொழில் என்பதால் பெரும்பாலும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வரமுடியும். அம்மா, கலைச்செல்வி காட்டு வேலைக்குச் செல்பவள். காலை 9 மணிக்கு மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக் குச் சென்று விட்டு மாலை ஆறு மணிக்குதான் வீடு வந்து சேருவாள்.

ஒரே செல்லப்பெண் என்பதால் அதிகமாகவே செல்லம் கொடுத்து சக்திக்கு மீறி வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தார்கள். படிப்பில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் அந்த வயதிற்கே உரிய அழகுணர்வு அவளிடம் சற்று அதிக மாகவே இருந்தது. விளம்பரங்களில் பார்க்கும் அத்தனை அழகுப் பொருட்களையும் வாங்கத் துடிப்பாள். அப்பாவிடம் ஒன்று, அம்மாவிடம் ஒன்று என்று கொஞ்சிப் பேசியே சாதிப்பவள், ஒரு கட்டத்தில் பொய் காரணங்கள் சொல்லி பணம் வாங்கி செலவு செய்யவும் தீய நட்புகள் மூலம் பழகியிருந்தாள். கலைச்செல்வி ஒரு விவரமான தாயாக விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் வெளித்தோற்றத்திற்கு அளவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முதல் மாற்றத்திலேயே கிள்ளி எறிந்திருப்பாள். இப்படி ஒரு அசம்பாவிதத்தில் போய் முடிய விட்டிருக்கமாட்டாள்.

எதற்கெடுத்தாலும் அவளுடைய சக தோழிகளை ஒப்பிட்டு,போட்டி போட்டுக்கொண்டு அழகுபடுத்திக் கொள்ளத் துடிப்பாள் பொன்மணி. நட்பு வட்டத்தில் தான் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற தற்பெருமை தலைதூக்கியதால் மகளிடம் ஏற்பட்ட அந்த பலவிதமான மாற்றங்களைக்கூட கவனிக்காமல் விட்டுவிட்டாள் கலைச்செல்வி. ஒருவேளை அதை சரியாகக் கையாண்டிருந்தால், பொன்மணி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்து கண்டித்து திருத்தியிருக்கலாம்.

இன்றைய சமூக-கலாச்சார சூழல் மிகப்பெரிய வேகத்தில் மாற்றத்தை அடைந்து வரும் நிலையில் அவரவர் குடும்பத்திற்கான தனிப்பட்ட இயக்கவியல் பின்னணியில் எத்தகைய மாற்றங்களை சந்திக்க நேரலாம் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு தாய்க்கும் மிக அவசியம். கலைச்செல்வி மகளிடம் ஏற்பட்டுள்ள எந்த மாற்றத்தையும் கவனிக்காமல், அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு என்று மெத்தனமாக இருந்ததன் பலனை நன்றாகவேஅனுபவித்துவிட்டாள். பதின்மக்கால நினைவுகள்எல்லோருக்கும் கடைசிவரை நீங்காமல் இருப்பது.

கண்ணாடியின் முன் நின்று முன்னும், பின்னும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த என்னை,அருகிலிருந்த என் அம்மாவின் குரல் சற்றே கண்டிப்பு கலந்த புன்னகையுடன், “பன்னிக்குட்டி கூட பருவத்தில் அழகாய்த்தான் இருக்கும். இதெல்லாம் நிரந்தரம் இல்லை. போய் ஒழுங்கா படிச்சு பொழைக்கிற வழியைப் பாரு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது இன்றும் என் உள்ளத்தில் ஆழப்பதிந்துதான் இருக்கிறது!ஆனாலும் அந்தப் பருவத்தில் இதுபோன்ற பொன் மொழிகள் வசை மொழிகளாகத்தான் அந்த நேர உற்சாகத்தை பொசுக்கி விடக்கூடும். பல நேரங்களில் மன அழுத்தங்களைக்கூட ஏற்படுத்தலாம். ஆனாலும் இது போன்ற அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டும் அருமருந்து என்கிறது தற்கால உயிரியல் ஆய்வுகள்.

நம் கலாச்சாரம் இதை போகிறபோக்கில் புரிய வைத்துக்கொண்டிருக்க, சமீபத்திய ஆய்வுகள் இதை உளவியல், உயிரியல் கோட்பாடுகள் மூலமாக நிரூபித்துள்ளன. மிகச்சிறிய அளவில் இதுபோன்று அளிக்கப்படும் அழுத்தங்கள் நம் மன வலிமையைக் கூட்டுகின்றனவாம்!

ஓர்மிசிசு என்பது கடந்த 20-- ஆண்டுகளில் மிக விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு உயிரியல் கோட்பாடு என்றாலும், உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலக்கூறுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

ஆம், பெற்றோர் கொடுக்கும் சிறிய அளவிலான தண்டனைகள் மன அழுத்தம் அல்லது துன்பம் ஏற்படுத்தக்கூடியதன்று. மாறாக அவர்களின் மன வலிமையை அதிகரிக்கும் ஊக்க சக்தியே தவிர உயிராக நினைக்கும் குழந்தைகளை வதைக்கும் செயல் அல்ல என்கிறது அந்த ஆய்வுகள். அவை அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்ற அக்கறைதான் என்பதை பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதற்கு எந்தத் தயக்கமும் காட்ட வேண்டியதில்லை.

முன்பெல்லாம் பேருந்துகளில் செல்லும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று கருதி அவர்களை பேருந்தின் முன்புறம், ஓட்டுநர் பார்வையில் இருக்குமாறு உட்கார வைப்பார்கள். ஆனால் சிலர் செய்யும் தவறுகள், வேலியே பயிரை மேயும் கதைகளாகிவிடுவதால் தற்போது அப்படி முன்புறம் அமர அறிவுறுத்தப்படுவதில்லை. சமூகத்தில் இதுபோன்று பாதுகாப்பு குறைவாக இருக்கும்போது பெற்றோரின் பொறுப்பு இரட்டிப்பாகிறது. அதுவும் பொன்மணியின் தந்தை போல தினமும் வீட்டிற்கு வர முடியாத பணியில் இருக்கும்போது அந்த தாயின் பொறுப்பு இன்னும் பன்மடங்காகிறது என்பதை கலைச்செல்வி சற்றும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இது சமூகத்தைச் சீர்குலைக்க அலையும் சில தீய சக்திகளுக்கு சாதகமாகிவிட்டது.

பொதுவாகவே இந்த வயதுக் குழந்தைகள் தன்னை யாராவது அழகு என்று சொல்லிவிட்டால் அப்படியே அந்த போதைக்கு அடிமையாகி விடுவதுண்டு. வீட்டில் கட்டுப்பாடு  இல்லாத குழந்தைகள் அந்த மயக்கத்தில் விவரம் அறியாது பெரும் பிரச்சனையில் சென்று மாட்டிக் கொள்வதுண்டு. இது போன்ற குழந்தைகளே அதிகமாக கயவர்களால் கவரப்படுகிறார்கள். இப்படித்தான் பொன் மணியையும் உசுப்பேற்றிவிட்டு ஒரு பையனை காதலிக்க வைத்திருக்கிறார்கள்.  அந்த வெகுளிப் பெண்ணும் எந்த விவரமும் புரியாமல் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து  கொடுத் திருக்கிறாள். மகளின் இந்த அபாயகரமான மாற்றத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத பேதையாக இருந்த அந்த தாயை என்ன சொல்வது!

வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கலைச்செல்வி வெளித் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு மகளை அழைத்து தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டாள். ஒரு சத்தமும் இல்லாததால் மீண்டும் 2, 3 மூன்று முறை அழைத்துவிட்டு உள்ளே ஒருவேளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று சத்தமிட்டவாறே உள்ளே சென்றவள், ஒரு கணம் அதிர்ந்து பின் வீரிட்டது அந்தத் தெருவையே கூட்டிவிட்டது.

ஆம், அந்த பிஞ்சுக் குழந்தை மின் விசிறியில் தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. மயங்கிச் சரிந்தவள் வாழ்க்கை அப்படியே முடங்கித்தான் போனது. மகளுக்கு என்ன நேர்ந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. காலையில் வேலைக்குச் செல்லும்போது கூட பள்ளி விடுமுறை என்றும் சிநேகிதிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கப் போவதாகத்தானே சொன்னாள், அதற்குள் என்ன நடந்திருக்கும், கணவன் அன்பு மகளின் நிலையைக் கண்டால் தன்னை அடித்தேக் கொன்றுவிடுவானே என்றும் அஞ்சி நடுங்கி சுருண்டுக் கிடந்தாள்.

தானாக மேலே ஏறி தூக்கு மாட்டிக் கொள்ளும் அளவிற்கு உயரமானவளும் இல்லை, கீழே நாற்காலி ஏதும் போடப்படவும் இல்லை. இது எல்லோருக்கும் புரிந்தாலும் யாரும் அதைப்பற்றி பேசவும் தயாராக இல்லை. அதற்குப் பிறகு யார் யாரோ என்னென்னமோ கதையும், காரணமும் சொல்லிக்கொண்டிருந்தாலும், பெற்றோருக்கு மட்டுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு அது. கலைச்செல்வி அதற்குப் பிறகு மீண்டு வரவேயில்லை. வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. கணவனின் வெறுப்பிற்கும் ஆளானாள்.

ஒரு தாயாக, கணவனும் அதிக நேரம் வெளியில் இருக்கும் நிலையில் மகளுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தால்அந்த பருவத்திற்கே உரிய அவளுடையமாற்றங்களை உணர்ந்திருக்கலாம். அல்ப ஆயுளில் போய்ச் சேராமல் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததன் விளைவு வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

இந்தப்பருவம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் மாற்றம், அதில் பிரச்சனைகள் வந்தால் அதன் பாதிப்பு, பின் விளைவுகள் என அனைத்தையும் குழந்தைக்கு முன்கூட்டியே, சமயம் அறிந்து புரிய வைத்திருக்க வேண்டியது ஒரு தாயின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். மகளுடைய பொழுதுபோக்குகள், எண்ணங்கள், விருப்பத் தேர்வுகள், விருப்பக் காட்சிகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் கவனித்திருந்தால் அவள் எப்படிப்பட்டவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்திருக்கலாம்.

சர்வதேச அளவில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் நம் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதும், இணையக் குற்றங்கள்27,248, பாலியல் வன்முறைகள் 2,039 என்ற எண்ணிக்கைகளிலும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ( ஆகஸ்டு 2019 முதல் பிப்ரவரி 5, 2020 வரை மட்டும் 33,152 புகார்கள் வந்துள்ளன).
இன்றைய கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமூகப் பின்னணியில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். சமூகம் சார்ந்த புதிய வாழ்க்கை முறைகள், நவீனகலாச்சாரம், சில தளங்களின் மதிப்பீடுகள் போன்றவைகள் ஆராயப்படவேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் மூலமே சமூக ஒழுங்கு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஊக்குவிக்கத் தகுந்த சட்டங்களை உருவாக்க இயலும்.

சமூகத்தை சீராகக் கொண்டு செல்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகள் அவசியம்.  இந்த ஆய்வுகள் மூலமே அறியாமையை ஒழிக்கவும், மறைக்கப்படும் சிக்கல்களை வெளிக்கொண்டுவரவும் இயலும். அறிவியல் அடிப்படையிலான தகவல்களைக் கொண்ட, புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும் இந்த ஆய்வின் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்பதிலும் ஐயமில்லை. இதனால் சமூக வளர்ச்சியும், வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடும் சாத்தியமாகிறது.
தொடருவோம்...
Tags:    

Similar News