லைஃப்ஸ்டைல்
பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்கும் குழந்தைகள்

ஊரடங்கால் கடைகள் அடைப்பு: பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்கும் குழந்தைகள்

Published On 2020-04-30 05:02 GMT   |   Update On 2020-04-30 12:43 GMT
ஊரடங்கு காரணமாக கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு கிடப்பதால், குழந்தைகள் இதுவரை விரும்பி சாப்பிட்ட நொறுக்குத்தீனி வகைகள் கிடைக்காததால் பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க தொடங்கியுள்ளனர்.
இந்தக்கால குழந்தைகள் சாப்பாட்டைவிட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிட்டனர். அதிலும் பீசா, பர்க்கர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், சாக்லெட்டுகள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்த பல்பொருள் அங்காடிக்கு சென்றாலும் அங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதுபோன்ற நொறுக்குத்தீனி வகைகள்தான் பிரதானமாக இருக்கும்.

இதுபோன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எவ்வளவோ கூறினாலும் அதை குழந்தைகளும் கேட்பதில்லை. பெற்றோரும் வாங்குவதை நிறுத்தவில்லை.அப்படிப்பட்ட நிலையை கொரோனா வந்து அடியோடு மாற்றிவிட்டது. ஆம்! கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல், வடை போன்ற பாரம்பரிய திண்பண்டங்களை பெரியவர்கள் செய்து கொடுக்க தொடங்கியுள்ளனர். சில பெண்கள் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இதுமாதிரி பலகாரங்களை செய்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.ஆரம்பத்தில் இவற்றின் மீது அதிக நாட்டம் கொள்ளாத குழந்தைகளும் தற்போது இந்த திண்பண்டங்களை விரும்பி சுவைக்க தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்தில் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பல நமது வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியவை. இருந்தபோதும் இதுபோன்ற ஒருசில நல்ல மாற்றத்தையும் கொடுத்துள்ளது என்று குடும்பத்தலைவி ஒருவர் கூறினார்.
Tags:    

Similar News