லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி தரும் புத்தக வாசிப்பு

குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி தரும் புத்தக வாசிப்பு

Published On 2020-04-29 03:28 GMT   |   Update On 2020-04-29 03:28 GMT
அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைக்கு நம் சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன. நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள். காலையில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல காலை , மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும். இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகளும் அக்கறைகளும் ஆர்வங்களும் தங்களைச் சுற்றியே அமைகின்றன. இவற்றில் எதுவுமே சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. ஆனால், பொதுவாக யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறை சிக்கல்கள் அவரவர் வாழ்க்கையில் தோன்றுகின்றன. இப்படி தோன்றும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சரிவர கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தை தாண்டி பார்க்க வேண்டும். இப்படி பார்க்க உதவுவதுதான் வாசிப்பு பழக்கம். இது மிக குறுகிய நோக்கம் என்றாலும் பயனுள்ளது. ஆனால், இதைவிட முக்கியமான உந்துதல் வாசிப்புக்கு பின்னால் செயல்படுகிறது.

இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்த துறையை சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறை புத்தகங்களையும் வாசிக்கும் போதுதான் ஒருவருடைய வாசிப்பு வளமானது என்று நாம் கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும்போதுதான் நம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.

ஒவ்வொரு புத்தகத்தின் மூலமும் உணர்வுகள், மொழி, பண்பாட்டு அடையாளங்கள், உலக நடப்பு என்று பல விஷயங்கள் நமக்குள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. வாசிப்பு என்பது புத்தகங்களை ஒரு முறை வாசிப்பது மட்டுமல்ல, மிக முக்கியமான புத்தகங்களை நாம் அடிக்கடி வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியமான புத்தகமும் நம்முடன் நெருங்கிவந்து நம் வாழ்க்கையின் கணங்களை வளமாக்க செய்வதை உணர்வது அற்புத அனுபவம்.

நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் என்பார்கள். இந்த நண்பனை உயிர் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள், புகழ் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் சாதனையாளராகவும், சிலர் புரட்சியாளராகவும் மாறியிருக்கிறார்கள். ‘அடிமைகளின் சூரியன்’ எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் தச்சுத் தொழிலாளியின் மகனாக பிறந்து, புத்தக படிப்பினால் தேசம் புகழ திகழ்ந்தார். ‘ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு’ என்ற புத்தகத்தை இரவல் வாங்கி படித்தவருக்கு அமெரிக்காவின் குடியரசு தலைவராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, அதுவே அமெரிக்க வரலாறாக மாறியது. லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களை படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமை தந்தையாக உயர்ந்தார்.

காஞ்சீபுரத்தில் இருந்து, முதுகலை பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கி சென்றான். முடிவில் தமிழகத்தின் முதல்வராக திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்வார்கள். அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்பொழுது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்பொழுது தான் வெளியே வருவாராம். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோதும், அவர் அரிதான நூல் ஒன்றை படித்து கொண்டிருந்தார்.

அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம், என் மடி மீது புத்தகங்களை பரப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான நூல்களையும் படிக்க ஆர்வம் காட்டியவர். இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

கல்வி அறிவை போதிக்கும் பள்ளி ஆசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை புத்தகங்கள். வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு மட்டும் புத்தகங்களாக பதிவாகவில்லை. அவர்கள் அந்த நிலையை எட்ட கைகொடுத்தவை புத்தகங்களாகவே இருக்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க புத்தகங்கள் சமீபகாலமாக ஒதுக்கப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பே குறைந்துவிட்டதாக மற்றொரு சர்வே தெரிவிக்கிறது. விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் சொடுக்கும் கணினி உலகம், புத்தகங்களையும் கையடக்கமாக கொண்டுவந்து விட்டதால் இப்போது அதில் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மணிகண்டன், 9-ம் வகுப்பு,

அரசு உயர்நிலைப்பள்ளி,

அளவிடங்கான், சிவகங்கை.
Tags:    

Similar News