லைஃப்ஸ்டைல்
ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் ஆசிரியர்

ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் ஆசிரியர்

Published On 2020-04-21 03:46 GMT   |   Update On 2020-04-21 03:46 GMT
ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில், திருக்குறளை கற்று வாட்ஸ்-அப் குரூப்பில் வீடியோவாக அனுப்ப வேண்டும் என ஆசிரியர் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்.
கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், கொரோனாவின் தாக்கம் அறியாமல் சிலர் வெளியே சென்று விளையாடுவதாகவும், வீட்டில் இருக்கும் மாணவர்கள் டி.வி. பார்ப்பது மற்றும் சின்ன, சின்ன சேட்டைகளை செய்து பெற்றோருக்கு இடைஞ்சலையும் உருவாக்குவதாக தெரிகிறது.

இந்தநிலையில், ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் முயற்சி எடுத்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தில் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வாட்ஸ்-அப் குரூப் உள்ளது. இதில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் இணைந்துள்ளனர். பள்ளிக்கு பயனுள்ள நல்ல விஷயங்கள் இதில் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள மாணவர்கள், கல்வி கற்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் கென்னடி நடவடிக்கை எடுத்தார்.

அதாவது, முதல்கட்டமாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்து வீடியோவில் பதிவு செய்து பள்ளி வாட்ஸ்-அப் குரூப்பிற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 திருக்குறளும், 2-ம் வகுப்பிற்கு 45 திருக்குறளும், 3-ம் வகுப்பிற்கு 60 திருக்குறளும், 4-ம் வகுப்பிற்கு 80 திருக்குறளும், 5-ம் வகுப்பிற்கு 100 திருக்குறளும் ஒப்புவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவு செய்தனர்.

கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 2-வது வாரமாக இன்று முதல் நடனம், 3-வது வாரம் பாட்டு, 4-வது வாரம் வாசித்தல் திறன் குறித்த போட்டிகள் நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறந்த பின்பு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News