லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு திட்டமிட்டு செலவு செய்ய சொல்லி தரவும்

குழந்தைகளுக்கு திட்டமிட்டு செலவு செய்ய சொல்லி தரவும்

Published On 2020-03-06 03:04 GMT   |   Update On 2020-03-06 03:04 GMT
உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தை கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும்.
நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்க சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியை கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லி கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும். நல்ல ஒரு பணியை பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கி கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. கடையில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டு சரிபார்க்கின்றனர்?

ஒரு திரையரங்கில் செலவு செய்கின்ற பணத்தையோ அல்லது ஒரு வணிக வளாகத்தில் குடும்பத்துடன் சென்று செலவழிக்கின்ற தொகையோ அதை நாம் ஈட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை உணர்கிறீர்களா?

இ.எம்.ஐ. என்ற எளிய மாதத்தவணை முறையை வணிக உலகில் அறிமுகப்படுத்திய பின்புதான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதாவது எவ்வளவு விலை உயர்ந்த பொருட்களாக இருந்தாலும் அதற்கு ஒரு குறைந்த முன்பணம் மட்டும் செலுத்திவிட்டு அந்த பொருளை நாம் உடமையாக்கி கொள்ள முடியும். பின்பு மீதம் உள்ள தொகையை வட்டி கணக்கிட்டு அதை அசலுடன் கூட்டிய பின் அதை சம மாதத்தவணைகளாக பிரிக்கும்போது செலுத்த வேண்டிய தொகை மிகவும் எளிதாக தெரியும்.

அதிலும் பணம் செலுத்த வேண்டிய மாதங்களின் எண்ணிக்கையின் கால அளவை அதிகரித்தால், செலுத்த வேண்டிய பணம் இன்னும் குறைவாக தெரியும். ஆனால், அதற்கான வட்டி பல மடங்கு கூடிவிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. நாம் வாங்கும் பொருள் நமக்கு அவசியம்தானா? என்று யாரும் சிந்திப்பதில்லை. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக தனது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். குழந்தைகளுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கணக்கு பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதை பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் தகுதியை பெரிதாக காட்டி கொள்வதற்காக வீண்செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தை கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்க சொல்லுங்கள். அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்க சொல்லுங்கள். அதன் மூலம் கூடுதலாக செய்த செலவுகளும், அனாவசியமாக செய்த செலவுகளும் தெரிய வரும். அதனை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்தப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.

பொருளை ஈட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளை திறமையாக திட்டமிட்டு கையாள்வது குறித்த விழிப்புணர்வையும் நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கினால், நம் நாடும் பொருளாதாரத்தில் மேலும் வளர்ச்சியடையும்.


Tags:    

Similar News