பெண்கள் உலகம்
குழந்தைகளுக்கு அடிக்கடி முதுகு வலி வரக்காரணங்கள்

குழந்தைகளுக்கு அடிக்கடி முதுகு வலி வரக்காரணங்கள்

Published On 2020-03-03 09:38 IST   |   Update On 2020-03-03 09:38:00 IST
இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.

முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில்  கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.

இதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.

இன்றைய தேதியில் பிறந்த குழந்தையை தாலாட்ட அம்மாவை விட அலைபேசியே முக்கியம் என்ற நிலை. உங்களுக்கே தெரியும் உங்கள் குழந்தைகளின் ஒரு நாளில் எவ்வளவு நேரம் அலைபேசியில் கார்ட்டூன் விடீயோக்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. அவ்வாறு அவர்கள் விடியோக்கள் பார்க்கும் போது எப்படி உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவனியுங்கள். சிறுவர்கள் மணிக்கணக்கில் இந்த மின்னணு உபகாரணங்களுக்கு முன் அமரும் போது கூனல் தோற்றத்தில் அல்லது முதுகு குனிந்த போக்கில் உட்காராத் தொடங்குகின்றனர்.

இதனால் கீழ்முதுகுப் பகுதியில் அமைந்துள்ள உடலுக்கு அடிப்படையாய் (Foundation) இருக்கும் தசைகள் நாளடைவில் வலிமையிழந்து வலிமையற்றதாகின்றன. இது உடலில் உள்ள சமநிலையை பாதித்து சமமின்மையை உருவாக்குகின்றது. நம்முடைய உடல் ஒரு சங்கிலி போல, ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் கூட அது உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கிறது. அதுவும் சிறுவர்கள் உடல் இவ்வயதில் தான் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆனால் நீண்ட நேரம் தவறாக உட்காருவதால் நடுமுதுகில் கூன் உண்டாக்குகின்றது. இதனால் ஒட்டு மொத்த உடல் அமைப்பே பாதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விளாயாட்டை விளையாட விரும்புகின்றனர் அல்லது பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் விளையாடுவதால் நல்ல உடல் வலிமையையும், உடல் உறுதியும் பெறுவார்கள் என எண்ணுகின்றனர். ஆனால் ஒரு விளையாட்டு விளையாடுவதற்கு முன்னர் அதற்கேற்ற உடல் வலிமையும், அவ்விளையாட்டை விளையாட உடல் உறுதியும் குழந்தைகளிடம் உள்ளதா என்று எண்ணிப் பார்க்க தவறிவிடுகின்றனர். தவறான விளையாட்டையோ அல்லது உடல் உறுதி அதிகம் தேவைப்படும் / கடுமையான விளையாட்டுகளையோ பெற்றோர்களின் வற்புறுத்தலால் முறையான பயிற்சியின்றி விளையாடுவதால் அழுத்த எலும்பு முறிவுகள் (Stress Fracture) குழந்தைகள் கீழ் முதுகில் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான எலும்பு முறிவு ஆகும்.

சிறுவர்களின் தசைகள் மேற்கூரிய காரணங்களினால் மிகவும் வலிமையற்றதாய் இருக்கும் நிலையில், எந்தவொரு விளையாட்டும் தசைகளின் வலிமையை இன்னும் மோசமாக்கி எலும்பு முறிவு ஏற்படக் காரணமாய் அமைகிறது.

குழந்தைகள் விளையாடுவதே தவறு என்பது என்னுடைய கருத்து அல்ல. எந்தவொரு விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பே அதற்குரிய முறையான பயிற்சியும், சரியான உடல் வலிமையையும், சரியான வழி காட்டலும் மிகவும் அவசியம்.

Similar News