லைஃப்ஸ்டைல்
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்

Published On 2020-02-17 03:20 GMT   |   Update On 2020-02-17 03:20 GMT
வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தரவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த முக்கியமான விஷயங்கள் இதோ உங்களுக்காக...
வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தரவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த முக்கியமான விஷயங்கள் இதோ உங்களுக்காக...

வீட்டை பராமரிக்க:

இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிக்காதீர்கள். சின்ன சின்ன ரிப்பேருக்கெல்லாம் ஆள் தேடாமல் அதாவது ஒரு பைப் ஒழுகினால் சரி செய்ய, டியூப்லைட் மாற்ற, காஸ் சிலிண்டர் புக் செய்ய , மின்சார பில் கட்டுவது போன்ற சாதாரண அத்தியாவசியமான விஷயங்களை நாமே செய்து கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து பழக்கலாம்.

வாகனங்கள் பராமரிக்க:

வீட்டிலுள்ள வாகனங்களின் தவணைத்தொகை சரியாக கட்ட, உரிய நேரத்தில் சர்வீஸ் விட, வண்டி சம்பந்தமான பேப்பர்களை பத்திரமாக வைக்க, ஒரு புது வண்டி வாங்க வேண்டும் என்றால் என்னென்ன விஷயங்களை பற்றி ஆராய்ந்து முடிவுவெடுக்க வேண்டும் என்பன போன்றவற்றை நாம் செய்யும் போது அதனை குழந்தைக்கும் சொல்லித் தரலாம்.

சமையல் கலை:

ஒரு நாளில் நாம் அதிக முறை செய்து கொண்டே இருக்கும் காரியம் என்னவென்றால் அது உணவு உண்பது தான். ஆணோ பெண்ணோ அடிப்படை சமையல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு நாள் ஸ்விக்கியை நம்பி காலம் தள்ள முடியும். விருந்து வைக்க தெரிகிறதோ இல்லையோ தனக்கு தேவையானவற்றையாவது செய்து கொள்ள அவசியம் பழக வேண்டும்.

புத்தகம் படிப்பது:

புத்தகங்கள் படிப்பதை சிறு வயது முதலே பழக்கி விடுங்கள். புத்தகத்தின் மீது செய்யும் செலவு ஒரு முதலீடு. பல்வேறு விஷயங்களை படிக்கத் தூண்டுங்கள். நமக்கு கடவுள் தந்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையில் உலகில் உள்ள எல்லா விஷயங்களையும் அனுபவித்து தெரிந்துக்கொள் இயலாது. ஆனால் புத்தகங்களில் உள்ள நிபுணர்களின் கருத்து நமக்கு வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கலாம். எனவே லீவு ஆரம்பிக்க போகிறது என்றால் குழந்தையையும் கூட்டிச்சென்று அவர்களுக்கு பிடித்த தலைப்பில் புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்க பழக்கலாம்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்:

சுற்றுப்பயணம் என்றவுடன் அயல்நாடு செல்வதை பற்றிச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். முடிந்தால் சந்தோஷமே.சுற்றுலாவின் மூலம் பல்வேறு நாடுகளில் மக்கள் எப்படி இருக்கிறார்கள், நாம் எப்படி நம் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றோ அல்லது அவர்களைவிட எப்படி சிறந்து விளங்குகிறோம் என்றோ புரிந்து கொள்ளலாம். வெளிநாடு செல்ல இயலவில்லையா பிரச்சினையே இல்லை, அடுத்த ஊருக்கு சென்று வாருங்கள். பிறந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று பண்பாடு சொல்லிக் கொடுங்கள். குறைந்தபட்சம் உறவினர் வீடுகள், திருமணங்கள் அதற்காவது அழைத்து செல்லுங்கள். குடும்பமாக பயணம் செய்யும் போதுஉறவுகளுக்கிடையே பிணைப்பு அதிகரிக்கும்.அத்தோடு பல விஷயங்களை கற்று கொள்ளலாம். கலாச்சாரம், கலைமக்கள், மண், விவசாயம், தொழில் முன்னேற்றம் என்று பலபல.

தொழில் தொடங்க:

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதில் படிப்படியாக என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும், யாரை அணுகலாம்; எப்படி முதல் சேர்ப்பது, வழிகாட்டியை எப்படி தேர்ந்தெடுப்பது; மார்க்கெட் நிலவரத்தை எப்படி ஆராய்வது, போன்ற விஷயங்களை சிறு வயது முதலே சொல்லிக் கொடுக்கலாம்.

தலைமைத்துவம்:

இது மிக மிக முக்கியமான பண்பு. ராபின் சர்மா என்ற பிரபலமான எழுத்தாளர் “லீடர் வித்தவுட் எ டைட்டில்” என்ற புத்தகத்தில் இப்படி சொல்லியிருப்பார், “ஒவ்வொரு மனிதனும் தலைவன் தான். யாரும் பட்டம் சூட்ட தேவையில்லை. தலைவனுக்கு உள்ள குணங்களுடன் செயல்பட்டால் கிரீடம் தானாக வரும்” என்று. ஒரு தலைவன் உதாரணமாக விளங்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும், தன்னைச் சார்ந்தவனை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் அவனிடம் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும். பரந்து விரிந்த இன்டெர்நெட்டில் பல விளையாட்டுகள் இருக்கிறது. அதை சற்று படித்து நம் பிள்ளைகளுக்கு குரூப் விளையாட்டுகள் மூலம் இந்த விஷயங்களை புகட்டலாம்.

வேலையை பகிர்வது:

வேலை பகிர்வு செய்ய தெரிந்தால் நம் வேலைகள் மிக எளிதாக குறுகிய காலத்தில் செய்து முடிக்கலாம். அது ஒரு கலை. யாரிடம் எந்த வேலையை பகிர்வது என்று தெரிந்திருக்க வேண்டும். தினமும் டேபிள் செட் செய்வது, செடிக்கு நீர் விடுவது போன்ற சிறுசிறு வேலைகளை பகிரலாம். ஆனால் “பாவம் குழந்தை. அது போன் விளையாடட்டும் நம்மால் இயன்றவரை செய்வோம்” என்று நினைக்கிறோம். அது குழந்தைகளை வேலை பழகாததோடு வேலை பகிரவும் தெரியாமல் பின்னாளில் திணறி விடும்.

முதலுதவி:

அவசர நேரத்தில் செய்யக்கூடிய முதலுதவியை அனைவரும் கற்றிருக்க வேண்டும். அதுவும் சிறு வயதில் இதுபோன்ற விஷயங்களை கற்கும் போது அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சியும் மன நிறைவும் ஏற்படும்.

நேர மேலாண்மை:

நம் நேரத்தை எப்படி சாமர்த்தியமாக செலவு செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகரமான மனிதராக வளரலாம். ஒரு நிமிடத்தின் அருமை ரயிலை தவற விட்டவருக்கு தெரியும். ஒரு நொடியின் அருமை ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவனுக்கு தெரியும்”.

எப்படி செயல்படுத்தலாம்?

“அது சரி இவ்வளவு விஷயத்தையும் என்ன கிளாஸா எடுக்க முடியும்” என்று கேட்கிறீர்களா? கஷ்டம்தான். ஆனால் நான் சொன்னவை எல்லாம் ஒன்றும் புதிதான விஷயங்கள் அல்ல. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் அடிபட்டு கற்றுக்கொண்ட விஷயங்கள் தாம் இவை. இதை பிள்ளைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான மிக எளிய வழி தினமும் இரவு குடும்பத்தோடு ஒன்றாக உணவு உண்ண வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் அவரவருடைய நாள் பற்றி விவரிக்கட்டும். அதில் மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் உள் அடங்கியிருக்கும். அதை கையாண்ட விதத்தை பற்றி விளக்கிச் சொல்லலாம். 20 வருடங்களுக்கு தினமும் இதைச் செய்தால் மேற்சொன்னது போக இன்னும் பலபல விஷயங்களை கற்றுக்கொண்டவர்களாக உங்கள் குழந்தைகள் திகழ்வார்கள்.

தொடர்புக்கு: director@kveg.in 
Tags:    

Similar News