லைஃப்ஸ்டைல்
தோல்வியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி?

தோல்வியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி?

Published On 2020-02-15 02:53 GMT   |   Update On 2020-02-15 02:53 GMT
குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அந்த பிரச்சினை தொடரும்.
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தை பிஞ்சு பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

கெட்ட வார்த்தைகள்கூட பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும் போதோ இப்படி தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். கடும் வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில், அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதை பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள் தான்.

இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அந்த பிரச்சினை தொடரும். ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும் போதே அதை பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கை கைவிடாது.

ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டு கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களை பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, சதுரங்கம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தை குழந்தைகளிடம் படிப்படியாக குறைக்க முடியும்.

வெற்றியை கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும். கம்ப்யூட்டரில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும் போது சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில், அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

குழந்தை பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும் போதும் தொடர வாய்ப்புண்டு. அதை அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் காண்பிக்கவும் வாய்ப்பு உண்டு. குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
Tags:    

Similar News