லைஃப்ஸ்டைல்
பள்ளிக்கு செல்வோம்

பள்ளிக்கு செல்வோம்

Published On 2020-01-29 03:51 GMT   |   Update On 2020-01-29 03:51 GMT
துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்காக பள்ளிக்கு சென்று படித்திட வேண்டும். இந்த பருவம் தான் கேட்டவை விடாமல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிய வைத்திடும் பருவம்.
‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பது பழமொழி. அதனால் தான் ‘இளமையில் கல்’ என்று கட்டளை இடுகின்றனர். ஒரு மனிதன் தனக்கு வேண்டிய பிற எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் எப்பகுதியிலும் பெறலாம். ஆனால் கல்வியை இளமையில்தான் பெற முடியும்.

ஒரு மனிதனின் இளமை பருவம் இனிமைப் பருவம். வரவுகள் இன்றி செலவுகள் செய்திடும் பருவம். அந்த துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்காக பள்ளிக்கு சென்று படித்திட வேண்டும். இந்த பருவம் தான் கேட்டவை விடாமல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிய வைத்திடும் பருவம். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப இளமையே கற்பதற்குரிய பருவம் ஆகும்.

கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்பது உலகநீதி. கல்வி செல்வமானது வெள்ளத்தால் அழியாது. நெருப்பால் எரிக்க முடியாது. கள்வரால் திருட முடியாது. பிறருக்கு கொடுப்பதால் நிறையும் அன்றி குறைபடாது என்பது கவிஞரின் கூற்றாக உள்ளது.

மனித வாழ்வில் முக்கியமான காலம் இளமை பருவம். அக்காலத்தில் நம் வாழ்வை நெறிப்படுத்திவிட்டால் ஆயுள் காலம் முழுவதும் மன அமைதியோடும் நிறைவோடும் வாழலாம். இளமையில் கடைபிடிக்கும் நல்ல பழக்கங்கள் தாம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும். வாய்மை கொல்லாமை ஊக்கமுடைமை இன்னா செய்யாமை போன்ற நற்பண்புகளை ஒருவன் தன் இளமை பருவத்தில் வளர்த்துக் கொண்டால் முதுமையில் சான்றோர் பாராட்டும் நிலையை அடைந்திடுவான்.

‘காலை எழுந்தவுடன் படிப்பு- நல்ல
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்திக் கொள் பாப்பா’ என்று பாரதியார் தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்கிறார் அவ்வையார். வறுமை கல்விக்கு தடையாக இருக்குமானால்

‘கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற அதிவீரராம பாண்டியனின் கூற்றை தலைமேற்கொண்டு அரசு தரும் நிதி உதவிகளை பெற்று இளமையில் கல்வி கற்பதே அறிவுடைமையாகும். மனித வாழ்க்கையில் விளையாட்டிற்கு ஒரு பருவம் இருக்கிறது. பொருள் தேட ஒரு பருவம் இருக்கிறது. கல்வி மட்டும் எக்காலத்திலும் கற்கலாம். இருப்பினும் கல்வி கற்பதற்கென்று ஏற்ற பருவம் இளமை பருவம் தான்.

எனவே மாணவர்களே நீங்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்ல இருக்கின்றீர்கள். இதேபோல் புதிதாக பள்ளிக்கு அடியெடுத்து வைப்பவர்களும் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டும். புதியவற்றை கற்பதிலும் தெரியாத பாடங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் முனைப்போடு இருக்க வேண்டும். கல்வி கற்பதன் அவசியத்தை உணர்ந்து ஆசிரியருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளியில் தினமும் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே வீட்டில் படித்து விட வேண்டும். அப்போது தான் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். பள்ளியில் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த மாணவனாக விளங்க வேண்டும். பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து இந்த கல்வி ஆண்டு பள்ளி வாழ்க்கையை தொடங்குவோம். 
Tags:    

Similar News