லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா?

குழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா?

Published On 2020-01-14 03:53 GMT   |   Update On 2020-01-14 03:53 GMT
குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை.
குழந்தை தத்தெடுப்பு என்பது பெருமளவில் சட்டத்திற்கு வெளியே தான் அதிகம் நடக்கிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் அல்லது ஆயா வேலை செய்பவர்களை குழந்தையில்லா தம்பதியினர் அணுகி “யாராவது குழந்தை வேண்டாம் என்று போட்டு விட்டு போய்விட்டால் தயவு செய்து அதை எங்களுக்கு கொடுங்கள். புண்ணியமாக போகும்” என்று வேண்டுகோள் வைப்பதுண்டு.

நர்ஸ் மற்றும் ஆயாக்களும் குழந்தையை காப்பாற்றும் நல்லெண்ணத்துடனும் குழந்தை இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்காமல் பெற்றவளால் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தையை அவர்களிடம் கொடுப்பதுண்டு. இதில் சிலர் பணத்திற்காக ஆசைப்பட்டு செயல்படுவதும் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் குழுவிலுள்ள இளம் பெண்கள் காதலிலோ குடும்பத்தாலோ பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் தற்கொலை முயற்சியில் இறங்கும் போது தடுத்து காப்பாற்றி குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து அந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதிகளுக்கு கொடுக்கும் மனிதாபிமான காரியங்கள் பிறர் கவனத்திற்கு வராமல் அங்குமிங்குமாக நடக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

வக்கீல் ஜெயராஜ் கூறுகையில் ‘எங்களுக்கு வேண்டாத யாரோ போனில் பேசி சதி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். குழந்தையை கொடுத்தவர்களோ வாங்கியவர்களோ யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு நிச்சயம் நிற்காது. இது பொய்யான புகார்’ என்றார்.

இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 2893 ஆகும்.

ஆனால் அரசின் குழந்தை காப்பகத்தில் 298 குழந்தைகள் தான் வளர்ப்பில் உள்ளனர். அதாவது தேவைக்கும் இருப்புக்குமான இடைவெளி மிக அதிகம். விவரமறிந்து இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ...!

குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை. வரிசைப்படி வரும்போது அவரவருக்கு எந்த குழந்தை அமைகிறதோ அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

தத்தெடுப்பு முறை குறித்து மக்களிடம் கேட்டபோது ‘தத்தெடுப்பு வழிமுறைகள் கடினமாக உள்ளது. அனைவராலும் பூர்த்தி செய்ய கூடியதாக இல்லை. ஆகவே தான் தவறுகள் நடக்கின்றன” என ஆதங்கத்துடன் கூறினார்கள்.

மேலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை விடவும் நோகாமல் குழந்தையை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் விற்பனைக்கு ஒரு காரணமாகும்!

குழந்தைகள் விற்பனையை பொறுத்தவரை வாங்குபவர்களும் வெளிப்படுத்துவதில்லை கொடுப்பவர்களும் வெளியே தெரியப்படுத்துவதில்லை. பரஸ்பரம் அவரவர்களின் தேவைகளை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றி போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது.

‘குழந்தை தத்தெடுப்பு விவகாரங்களில் கடந்த காலங்களில் அனாதை இல்லங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துவிட்டன. அதை களைவதற்குத் தான் மத்திய அரசு ‘இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து முறைப்படுத்தி உள்ளது. இதில் யாரும் தவறு செய்யவே முடியாது’ என்கிறார்கள் சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

சமூக பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனாவிடம்(ஐ.ஏ.எஸ்) இதுகுறித்து பேசிய போது “குழந்தைகளை ‘அடாப்ஷன்’ கொடுத்த நிறுவனங்களில் முன்பு பல தவறுகள் நடந்து விட்டன. பணத்திற்கு முக்கியத்துவம் அதிகாரம் செல்வாக்கிற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நடக்காத வகையில்தான் 2015-ம் ஆண்டில் இருந்து இணையதள பதிவு கொண்டுவரப்பட்டது. குழந்தைகளை விற்கவோ வாங்கவோ முயற்சிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் ‘குழந்தை வேண்டாம் என்பவர்கள் சாலையில் அனாதையாக கண்டெடுக்கும் குழந்தையை ஒப்படைக்க விரும்புபவர்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு விங்கை சேர்ந்த ஒருவர் சம்பந்தபட்ட இடத்திற்கே வந்து அந்த குழந்தையை பெற்று செல்வார்கள்’ என்றார்.

தமிழகத்தில் 1992-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கொடிய வழக்கம் இருந்தது. அதை தடுக்கும் நோக்கத்தில்தான் தொட்டில் குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. தனக்கு குழந்தை தேவையில்லை என்ற எந்த தாயும் அதில் போட்டு விட்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டது.

கணவராலோ அல்லது காதலனாலோ கைவிடப்பட்ட பெண்கள் வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத பெண்கள் அந்த தொட்டிலில் தங்கள் குழந்தையை போட்டு சென்றனர். தொட்டிலில் போடப்பட்ட குழந்தைகள் அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்களில் பேணி வளர்க்கப்பட்டனர்.

தொட்டில் குழந்தைகள் திட்டம் முதலில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த திட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 150 குழந்தைகள் வந்து சேர்ந்தன.

இது வரை இந்த திட்டத்தின் மூலமாக மொத்தம் 5239 குழந்தைகள் கிடைத்துள்ளன. முதல் 7 ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டத்தில் 3279 குழந்தைகள் வந்தன. ஆனால் 1999 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 1963 குழந்தைகள் மட்டுமே வந்துள்ளன.

ஏன் தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது?

சமூக ஆர்வலர்களிடம் இதுதொடர்பாக கேட்டபோது அவர்கள் கீழ்க்கண்ட காரணத்தை அடுக்கடுக்காக முன்வைத்தார்கள்.

. தொட்டில் குழந்தைகள் அக்கறையோடு வளர்க்கப்படவில்லை.

. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த அரசின் பிரசாரங்கள்.

. குடும்பகட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால்!

. சட்டத்திற்கு புறம்பாக ஸ்கேன் மூலமாக பெண் குழந்தையை முன்கூட்டியே கண்டறிந்து அதை அதிக பணம் கொடுத்து அழித்து விடுகிற போக்கு!

. விருப்பமில்லாமல் குழந்தை பெற்றவர்களை கண்டறிந்து பணம் கொடுத்து வாங்கி குழந்தைகளை விற்கும் நாமக்கல் நர்ஸ் போன்றவர்களின் கைங்கரியம்!

. அரசு பாதுகாப்பில் பத்தோடு பதினொன்றாக தன் குழந்தை வளர்வதை விடவும் எதோ ஒரு வசதியான குடும்பத்தில் வளரட்டுமே என்ற குழந்தை பெற்றவர்களின் எண்ணம்.

தொட்டில் குழந்தைகள் திட்டம் முதன் முதலில் தேனி தர்மபுரி சேலம் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் அமல்படுத்தப்பட்டது. பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 மையங்களில் இப்படி வந்து சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள்.

இரண்டு விதங்களில் குழந்தைகள் இந்த மையங்களுக்கு கிடைக்கின்றன. ஒன்று தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் வழியாக மற்றொன்று சாலையோரங்களில் கைவிடப்பட்ட காப்பாற்ற யாருமின்றி கிடைக்கும் குழந்தைகள்.

இந்த மாதிரி குழந்தைகளை யாராவது கண்டால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இது கட்டணமில்லா தொலைபேசி எண்ணாகும். இந்த எண்ணில் பேசினால் மறுபுறத்தில் பேசுபவர் தெளிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பார்.

இந்த குழந்தைகள் 18 வயது வரை அரசால் பேணி வளர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று இந்த குழந்தைகளை பார்வையிட்டு தத்து எடுக்க வாய்ப்பில்லை. இணையதளத்தின் வழியாகத்தான் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.

இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க தெரியாதவர்கள் மாநில தத்து வழங்கும் ஆதார மையத்திற்கு சென்று உதவி கோரலாம். அங்கே விண்ணப்பிக்க உதவி செய்யப்படும். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கலெக்டர் தலைமையில் இயங்குகிறது. இதில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

குழந்தைகள் நலத்திற்கான இந்திய கவுன்சில் அமைப்பின் கிரிஜாவிடம் பேசிய போது “குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். வளரப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் இதில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாதவர்கள் நாமக்கல் சம்பவம் போன்று குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சில அரசு ஊழியர்களும் துணை போகிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

Tags:    

Similar News