லைஃப்ஸ்டைல்
சிறுவர் உலகத்தை மயக்கிய வீடியோ கேம்கள்

சிறுவர் உலகத்தை மயக்கிய வீடியோ கேம்கள்

Published On 2019-11-29 03:00 GMT   |   Update On 2019-11-29 03:00 GMT
உங்களுக்கு “வீடியோ கேம்’ என்றால் உசிரு” என்று நீங்கள் சொல்லாமலே எங்களுக்குத் தெரியும். வீடியோ கேம் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
உங்களுக்கு “வீடியோ கேம்’ என்றால் உசிரு” என்று நீங்கள் சொல்லாமலே எங்களுக்குத் தெரியும். நிறைய குழந்தைகளின் பெற்றோர் புலம்புவதே எங்கள் பிள்ளைகள் செல்போனை எடுத்தால் கண்கொட்டாமல் பார்க்கிறார்கள், விளையாடுகிறார்கள் என்றுதானே? 1972-ல் இதே நாளில்தான் (நவம்பர்29) முதல் வீடியோ கேம் விற்பனை செய்யப்பட்டது. இன்று உலகின் வணிகச் சந்தையில் வீடியே கேம்களுக்கு முக்கிய இடம் உண்டு. வீடியோ கேம் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

* சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வீடியோ கேம்களுக்கு ரசிகர்கள்தான். செல்போன்-கணினி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் தீவிர விளையாட்டு ஆர்வமுடையவர்கள்.

* முதல் வீடியோ கேம் 1950-ம் ஆண்டுவாக்கில் வெளியானது. கணினிகள் அதிகம் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே வீடியோ கேம்களும் தோன்றிவிட்டன. முதல் வீடியோ கேம் விளையாட்டாக அறியப்படுவது ‘ஸ்பேஸ்வார்’ என்பதாகும். ஆண்டுதோறும் புதிய புதிய விளையாட்டுகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தன.

* நோலன் புஷ்னெல் என்பவர் ‘பாங்க்’ என்ற விளையாட்டை தயாரித்து 1972-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வணிக ரீதியில் விற்பனைக்குவிட்டார். அதற்கு முன்புவரை உள்ள வீடியோ கேம் விளையாட்டுகள் கருவியுடன் அல்லது கணினியுடன் இணைந்ததாக வந்தன. டென்னிஸ் விளையாட்டின் பிரதிபலிப்பாக தயாரான இந்த வீடியோகேம் விளையாட்டுதான் முதன் முதலில் விலைக்கு விற்பனையான விளையாட்டாகவும், நல்ல சந்தை மதிப்பை பிடித்த விளையாட்டாகவும் பிரபலமானது. அதற்குபிறகு வீடியோகேம் சந்தை புது உத்வேகம் பெற்றது என்றால் மிகையில்லை.

* வீடியோ கேம் விளையாட்டுகள் எண்ணற்றவை உள்ளன. இவை எலக்ட்ரானிக் கருவிகளின் திரையில் விளையாடப்படுகின்றன. அவை விளையாடும் தன்மையைப் பொறுத்து விதவிதமாக பிரிக்கப்படுகின்றன. பங்கு வகிக்கும் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் போட்டி விளையாட்டுகள், சாதுர்ய திறன் விளையாட்டுகள், கூட்டாக விளையாடும் விளையாட்டு, தனிநபர் விளையாட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

* விளையாடும் கருவிகளின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், இணையதள விளையாட்டுகள், விளையாட்டு சாதன விளையாட்டுகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

* விற்பனை அடிப்படையில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து ஆடும் விளையாட்டுகள், வலைத்தளங்களில் பங்கிட்டு ஆடும் விளையாட்டுகள், கருவிகளுடன் விலைக்கு வாங்கி விளையாடும் விளையாட்டுகள், ஆன்லைனில் நிகழ்நேரத்தில் ஆடும் விளையாட்டுகள் என வகைப்படுத்தலாம்.

* அவ்வப்போது பல்வேறு விளையாட்டுகளுக்கு மவுசு அதிகரிப்பது உண்டு. போர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடும் விளையாட்டுகள், ரேஸ் விளையாட்டுகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவர்கின்றன.

* ஜப்பானிய நிறுவனமான நைன்டென்டூ, வீடியோ கேம் விளையாட்டுகளில் முதன் முதலில் பல்வேறு புதுமைகளை புகுத்தியது. விளையாட்டுக்கென தனி எந்திரத்தை உருவாக்கியதிலும், அந்த எந்திரத்தை அடுத்தடுத்த தலைமுறை மாற்றங்களுக்கு கொண்டு சென்ற பெருமையும் இந்த நிறுவனத்தைச் சாரும். ரிமோட்போல விளையாட்டு கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கிய பெருமையும் இதனுடையதுதான். எண்ணற்ற வீடியோ கேம்களையும் உருவாக்கி வீடியோ கேம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. போகிமான், சூப்பர் மரியோ பிரோஸ், ஸ்டார்டேவ் வேலி உள்ளிட்ட பல விளையாட்டுகள் இதன் தயாரிப்புகளாகும். இருந்தாலும் இன்றைய காலத்தில் சீன நிறுவனமான டென்சென்ட், ஏசியா பசிபிக் உள்ளிட்டவையும் வீடியோ கேம் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

* சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான விளையாட்டு போட்டி மற்றும் சண்டை விளையாட்டுகள்தான். ‘மார்ட்டல் காம்பட்’ என்பது புகழ்பெற்ற சண்டை விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு 4 பேர் கொண்ட குழுவின் 10 மாத கால முயற்சியில் உருவாக்கப்பட்டது. அந்த விளையாட்டு முதல் 6 மாதத்திற்கு பெயர் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

* பிளேஸ்டேசன் -2 கருவியில் விளையாடியிருக்கிறீர்களா? வீடியோ கேம் விளையாட்டுகளில் புதிய மறுமலர்ச்சி ஏற்படுத்திய பெருமைக்குரிய சாதனம் இது. பிளேஸ்டேசன் கருவிகளில் விளையாடும்போது சீரற்ற வகையில் டவர்களும், தொகுதிகளும் (பிளாக்ஸ்) காணப்படுவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்களா? பிளாக்ஸ்கள் விளையாட்டு சேமிக்கப்பட்டதை குறிக்கும். டவர்களின் உயரம், நீங்கள் எவ்வளவு நேரம் விளையாடினீர்களோ அதற்கேற்றாற்போல உயரமாக இருக்கும்.

* விளையாட்டு கருவிகளில் அதிகமாக விற்பனையான சாதனம் பிளேஸ்டேசன்-2 கருவிதான். இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பாகும். தற்போது இதன் புதிய பதிப்பான ‘பிளேஸ்டேசன்-4’ நவீன தொழில்நுட்பங்களுடன் விற்பனையாகிறது.

* வீடியோ கேம் விளையாட்டுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், நேரம் குடிப்பவையாகும். சிறுவர்களும், மாணவர்களும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். எனவே விளையாட்டுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற நேரங்களை படிக்கவும், வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவதுதான் சமர்த்து பிள்ளைகளுக்கு அழகு. நீங்கள் சமர்த்துதானே?!
Tags:    

Similar News