லைஃப்ஸ்டைல்
சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான சிலிர்ப்பூட்டும் ஆபரணங்கள்...

சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான சிலிர்ப்பூட்டும் ஆபரணங்கள்...

Published On 2019-10-26 03:30 GMT   |   Update On 2019-10-26 03:30 GMT
தத்தித் தத்தி நடை பயிலும் சிங்காரச் சிறுமிகள் சிலிப்பூட்டும் நகைகளை அணிந்து கைகளையும் கால்களையும் அழகிய தத்தை மொழி பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம் தான்.
தத்தித் தத்தி நடை பயிலும் சிங்காரச் சிறுமிகள் சிலிப்பூட்டும் நகைகளை அணிந்து கைகளையும் கால்களையும் அழகிய தத்தை மொழி பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம் தான்.

நகைக்கடைகளில் நுழைந்தால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கென்று நகைப்பிரிவுகள் இருக்கின்றன.

முன்பெல்லாம் குழந்தைகளுக்குக் காது குத்தும் பொழுது ஒற்றைக்கல் கம்மல், ஸ்டார் கம்மல் வெள்ளரி விதைத் தொங்கல் இவற்றைத்தான் குத்துவார்கள். இப்பொழுது அப்படியில்லை, சிறிய பாலி மாடல் கம்மல், சிறிய பூனை, நாய்க்குட்டி, வண்ணத்துப் பூச்சிகளில் ஒற்றைக்கால் பதித்தது போலவும், சிறிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திர வடிவங்களிலும் கம்மல்கள் வந்திருக்கின்றன.

ஒரே சிறிய ஒற்றை முத்துடன் மிகச்சிறிய கற்கள் பதித்த கம்மல், மீன் கம்மல், மெல்லிய கொக்கியில் கனமில்லாத டிசைன்களுடன் தொங்கல்கள், இதய வடிவக் கம்மல்கள், வைரக்கற்கள் பதித்த வித்தியாசமான வடிவங்களில் வரும் சிறு கம்மல்கள் என அனைத்தும் அத்தனை அழகாக உள்ளன. டிசைனர் கம்மல்களில் குட்டி வாத்தின் கண்கள் மற்றும் உடலில் சிறிய கற்கள் பதித்தது போன்று இருப்பது, கேக் வடிவக் கம்மல், காளான் வடிவக் கம்மல், ஆமை வடிவக் கம்மல் போன்றவை பார்ப்பதற்குப் புதுமையாகவும், அழகாகவும் வந்துள்ளன. இந்தக் கம்மல்களில் வண்ண இனாமல் மற்றும் கற்கள் பதித்திருப்பது பார்க்க அற்புதமாக உள்ளது.

குழந்தைகள் அணியும் கை வளையல்களில் பெரும்பாலும் பிளெயின் காப்புகளே இருந்தன. இப்பொழுது பல்வேறு சுற்றுகளுடன் வரும் அட்ஜஸ் டபிள் வளையல்கள், ஒரே சுற்று டிசைனர் காப்பு, கருப்பு மணி பதித்த வளையல்கள், ரூபி பதித்த சின்னஞ்சிறு டிசைனர் வளையல்கள், அழகிய செயின் வடிவ பிரேஷ்லெட்டுகள், வளையல் வடிவ பிரேஷ்லெட்டுகள், வொயிட் கோல்டு வளையல்கள் என எத்தனையோ டிசைன்கள் உள்ளன.

இப்பொழுது குழந்தைகள் அணியும் பிரேஷ்லெட்டானது அவர்களது கைவிரலில் அணியும் மோதிரத்துடன் இணைந்து வந்துள்ளன. இதனால் மோதிரம் அல்லது பிரேஷ்லெட்டானது கழன்றாலும் அவை தொலைந்து போக வாய்ப்பில்லை. பிரேஷ்லெட்டுகளிலும் காதணிகளில் வருவது போலவே டிசைனர் பொம்மைகள் தொங்குவது போலும், பதித்தது போலும் வருகின்றன. அவற்றில் எனாமல் பூசப்பட்டு வருபவை கண்களைக் கவரும் விதமாக உள்ளன.

கற்கள் பதித்த அழகிய மோதிரம் அதற்கு செட்டாக அதே வடிவத்துடன் பிரேஷ்லெட் இவை இரண்டையும் இணைக்கும் மெல்லிய தங்கச் செயின், குழந்தையின் பிஞ்சுக் கைகளில் அணிந்திருக்கும் இவ்வகை நகைகள் ஆயிரம் கதைகளைக் கூறும். அவர்களின் அழகான கையசைவிற்கு இந்த நகைகள் மேலும் அழகு சேர்க்கின்றன.

கொலுசு போடாத பெண் குழந்தைகளைப் பார்ப்பதே அரிது எனலாம். கொலுசுகளில் அதிகச் சலங்கைகள் வைத்தவை, ஆங்காங்கே சலங்கை வைத்தவை, தண்டை, கருப்பு நிறக் கயிற்றில் வெள்ளிக் குண்டுகள் கோர்த்த கொலுசு, கருப்பு மணி கோர்த்த வெள்ளிக் கொலுசு, டிசைனர் கொலுசுகள் என எத்தனையோ வகைகள் உள்ளன.

சில வீடுகளில் குழந்தைகளுக்குத் தங்கம் மற்றும் நவரத்தினக் கொலுசுகளையும் அணிந்து அழகு பார்க்கிறார்கள். குழந்தைகளின் சலங்கை ஒலி அவர்கள் எங்கு தவழ்ந்து செல்கிறார்கள்? எங்கு நடந்து செல்கிறார்கள்? விழித்திருக்கிறார்களா? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

பிஞ்சு விரல்களில் அணியும் மோதிரங்களில் இத்தனை வகைகளா? என ஆச்சரியம் தோன்றுகின்றது. ஒற்றைக்கல் மோதிரம், வெள்ளை, சிவப்புக் கல் மோதிரம், தட்டையான தங்க மோதிரம், டிசைனர் மோதிரங்கள், வைர மோதிரம் என ஒவ்வொன்றிலும் ஏராளமான டிசைன்கள் உள்ளன.

குழந்தைகளின் நகைகளில் டிசைனர் ஆபரணங்கள் அருமை என்று சொல்லலாம். காதுக் கம்மல், செயின் டாலர், பிரேஷ்லெட், மோதிரம், கால் கொலுசு அனைத்திலும் ஒரே டிசைன்கள் இருக்கும் டிசைனர் நகை செட்டுகளைப் பார்க்கும் பொழுது குழந்தைகளுக்கு நகைகள் வாங்கும் வேலை எளிதாகின்றது.

அழகிய நெக்லஸ்கள், செயின்கள், ஹாரங்கள், சோக்கர்கள், வங்கிகள், ஒட்டியாணங்கள், மாட்டல்கள், சுட்டிகள், கால் கொலுசுகள் ஆகிய அனைத்துமே குட்டிப் பெண் குழந்தைகளுக்கென்றே அற்புதமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

இதுபோன்ற நகைகளானது குழந்தைகள் அணிந்து கொள்ள வசதியாகவும், எடை குறைவாகவும் வந்திருக்கின்றன. தாய், மகள் இருவரும் ஜோடியாக அணிந்து கொள்வது போலவும் நகைகள் வந்திருக்கின்றன.

பெண் குழந்தைகள் நகைகளை அணிந்து புத்தாடை உடுத்தி அங்கும் இங்கும் நடக்கின்ற அதை ரசிக்கக் கண் கோடி வேண்டும். குழந்தைகளுக்கு நகைகளை அணிவிக்கும்போது அவை குழந்தைகளுக்கு உறுத்தாமல் சவுகரியமாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்து பின்னர் அணிவிக்க வேண்டும்.
Tags:    

Similar News