லைஃப்ஸ்டைல்
உடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி?

உடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி?

Published On 2019-10-09 03:46 GMT   |   Update On 2019-10-09 03:46 GMT
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது கவனித்துக்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும். அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கால நிலை மாற்றம், குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொடர் இருமல் போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும்.

அவர்கள் அந்த சமயத்தில் அசௌகரியமாக உணர்வதாலும், உடலில் என்ன மாதிரியான பிரச்னைகளை உணர்கிறார்கள், உபாதைகளை தாங்க முடியாத நிலையை எப்படி சொல்வதெனத் தெரியாமல் அழுதுக் கொண்டே இருப்பார்கள். சரியாக தூங்க மாட்டார்கள், சாப்பிடமாட்டார்கள், விளையாட மாட்டார்கள்.

இதை காணும் பெற்றோருக்கு குழந்தை அனுபவிப்பதை விட பெரும் வலியாக இருக்கும். அதற்கு அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

* குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனில் சில பெற்றோர்கள் தூங்க வைத்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் தூங்க நினைக்கிறார்கள் எனில் தூங்க வையுங்கள். விளையாட நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ’இண்டோர் கேம்’களை விளையாடி மகிழ்ச்சிப்படுத்துங்கள். அவர்களுக்கு கதை சொல்வது, ரைம்ஸ் பாடுவது, ஆக்டிவிடீஸ் என அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இதனால் அவர்கள் களைப்பில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். காய்ச்சல் குறையாமல் இருந்தால் வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

* காய்ச்சலின் போது மருத்துவரின் ஆலோசனைப் படி உணவுகளைக் கொடுங்கள். தினசரி உணவுப் பட்டியலைத் தவிருங்கள். நீர் ஆகாரங்கள் நிறையக் கொடுங்கள். குழந்தை உணவை வேண்டாம் எனத் தவிர்த்தால் திணிக்காதீர்கள். காய்ச்சல், சளி நேரத்தில் குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் குறைய மருத்துவரை அணுகி மருந்துகள் வாங்கியிருந்தால் அதை சரியான நேரத்தில் கொடுங்கள். வீட்டிலேயே சளிக்கு இயற்கைக் குறிப்புகளைப் பின்பற்றலாம். காய்ச்சல் நேரத்தில் உதடுகள் வறண்டு சிவப்பாக காணப்படும். இதனால் எரிச்சலாக உணர்வார்கள். இரத்தக் கசிவும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க வேஸ்லின் தடவிவிடுங்கள்.

* குழந்தை மிகவும் சிரமத்தை உணர்ந்தால், உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. முதல் குழந்தை எனில் எப்படி கவனித்துக் கொள்வது என்ற பதட்டம் இருக்கும். அதற்கு சிறந்த வழி மருத்துவர்களையோ, தாய்மார்களையோ அணுகி ஆலோசனைப் பெறலாம். புத்தகங்கள், ஆன்லைனிலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

* மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தாயின் அரவணைப்புதான். காய்ச்சல் நேரத்தில் உங்களுடைய முழு கவனத்தையும் குழந்தை மீது வையுங்கள். அவர்களுக்கு நீங்கள் உடன் இருப்பதே பெரும் தெம்பைக் கொடுக்கும். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல், முதுகைத் தடவிக் கொண்டே இருத்தல் போன்ற செயல் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. கட்டியணைத்துக் கொள்வதால் மிகவும் சௌகரியமாக உணர்வார்கள். விரைவில் குணமாவதற்கான சாத்தியங்களும் உண்டு.
Tags:    

Similar News