லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கான ஸ்டடி டேபிள்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கான ஸ்டடி டேபிள்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?

Published On 2019-10-08 03:22 GMT   |   Update On 2019-10-08 03:22 GMT
பிள்ளைகள் ஸ்டடி ரூமில், ஸ்டடி டேபிள் மற்றும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும், கவனச்சிதறல் இல்லாமலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது.
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக்குடும்பங்கள் என்பது மாறி தனிக்குடும்பங்கள் என்ற நிலையே அதிகரித்து வருகின்றது. அதிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டடி ரூம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகவும், ஸ்டடி டேபிள் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பர்னிச்சராகவும் உருவாகி விட்டது என்றே சொல்லலாம்.

ஸ்டடி ரூமில், ஸ்டடி டேபிள் மற்றும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும், கவனச்சிதறல் இல்லாமலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. இதுபோன்ற ஸ்டடி டேபிள்கள் வீட்டில் இருந்தால் அது மாணவர்களுக்கு உதவியாக இருப்பது போலவே பெரியவர்களுக்கும் அவர்களது அலுவலக வேலைகளைச் செய்வதற்குப் பெரிதும் உதவியாக உள்ளது.

ஒரு சிறந்த ஸ்டடி டேபிளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்ற டிப்ஸை இனி பார்க்கலாம்.

* படிப்பதற்காகவும், ஓவியங்கள் வரைவதற்காகவும் நாம்ஸ்டடி டேபிள் வாங்குவதாக இருந்தால் அதற்கு எந்த அளவில் வாங்கினால் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அளவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. காலேஜ் செல்லும் மாணவர்களுக்கு என்றால் அதற்கேற்றாற் போலவும், கின்டர் கார்டன் குழந்தைகள் என்றால் அதற்கேற்றாற் போலவும், பிரைமரி பிள்ளைகள் என்றால் அதற்கேற்றாற்போலவும்வாங்குவது சிறந்தது. அதேபோல், அறையின் அளவிற்கேற்ப வாங்கப் போகும் டேபிளின் உயரம், அகலம் மற்றும் நீளத்தைக் தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுடைய அறையானது சிறியதாக இருக்கும் பட்சத்தில் லினியர் டேபிளைத தேர்ந்தெடுத்தால் அவை சிறிய அறையில் கச்சிதமாகவும், அடக்கமாகவும் அதே சமயம் அழகான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும். பெரிய அறைகளில் ஹிஷேப் அல்லது ஷேப்மேசைகள் அருமையாகப் பொருந்தும்.

* தற்போதைய அறை அலங்காரத்தை மனதில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் மேசைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மார்டன் ஸ்டடி டேபிள்கள் இன்றைய நகர்ப்புற உள் அலங்காரங்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நம் அறையின் உள் அலங்காரத்திற்கு (இன்டீரியர் டிசைன்) பொருந்தும் சரியான டிசைனைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது. சில மேசைகள் நகர்ப்புறத் தோற்றத்தைத் தருவதற்காக கூரை போன்ற அமைப்பு மற்றும் கார்க் போர்டுகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது நம் அறை மற்றும் விருப்பத்திற்கேற்ப மேசைகளை இணையதளங்களின் மூலமே தேர்ந்தெடுத்து வாங்க முடியும்.

* ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைச் சரிபார்த்து வாங்குவது மிக மிக முக்கியமான ஒன்றாகும். படிக்கும் பொருள்களான புத்தகங்கள், பென்சில், பென், ரப்பர், சார்ட் பேப்பர்கள், ஸ்கெட்ச் பென்கள், லேப்டாப் என அனைத்தையும் அதற்கேற்ற ஸ்டோரேஜ் பெட்டியில் வைத்து விட்டால் நமக்குத் தேவையான நேரத்தில் ஒவ்வொன்றையும் தேடித் தேடி நேரத்தை வீண் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதிக ஸ்டோரேஜ் வசதிகளுடன் கூடிய மேசைகளில், அத்தியாவசியமான பொருட்களை அதிக சிரமமின்றி எளிதாக உபயோகிக்க முடியும். புத்தகங்களை வைக்க திறந்த இழுப்பறைகளும்,

பிற எழுதுபொருட்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை வைக்க மூடிய இழுப்பறைகளும் இருப்பது போன்ற மேசைகளைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாகும்.

* நாம் தேர்ந்தெடுக்கும் மேசையானது பனிச்சூழலியலுக்கு ஏற்றதா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து பின்னர் வாங்குவது சிறந்தது. வீட்டில் குழந்தையும் அதே சமயம் பெரியவர்களும் ஸ்டடி டேபிளை உபயோகப்படுத்துபவர்களாக இருந்தால் அவை யாருக்கு அதிக அளவில் பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு எல்லா விதத்திலும் பயன்படக்கூடிய மேசையை வாங்க வேண்டும். சில மேசைகளில் உயரங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருப்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவை வீட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும். கின்டர் கார்டனிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய ஸ்டடி டேபிள்களில் அழகிய கார்ட்டூன் சித்திரங்களான சோட்டா பீம், கிருஷ்ணா, சின்ட்ரில்லா, டோரேமான், ஸ்பைடர் மேன், ஹல்க் போன்றவை வரையப்பட்டு மிகவும் க்யூட்டான டேபிள் மற்றும் நாற்காலிகள் வந்துள்ளன. மேசையின் உயரமானது இருபத்தியாறு முதல் முப்பது அங்குலத்துக்குள் இருந்தால் பெரியவர்கள் உபயோகிக்க ஏற்ற மேசையாக இருக்கும். நாற்காலியில் உட்கார்ந்து மேசையின் உயரமானது நமக்கு ஏற்றாற்போல் இருக்கின்றதா என்பதை உறுதி செய்த பின்னர் மேசையை வாங்குவது சிறந்தது.

* தரமான பொருளால் செய்யப்பட்ட மேசையை வாங்குவது சாலச்சிறந்ததாகும். படிக்கும் மேசையானது படித்து முடித்த பிறகு, அலுவலக வேலையைப் பார்ப்பதற்கும் உபயோகப்படும் என்பதால் நீண்ட நாள் உழைக்கக்கூடிய நல்ல பொருளால் செய்யப்பட்ட மேசையை வாங்க வேண்டும். விலை சிறிது அதிகமாக இருந்தாலும், அவை தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற ஒரு பொருளாக மாறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரத்தினால் முழுவதும் செய்த மேசை, பாதி மரம் பாதி இரும்பு இவற்றால் செய்த மேசை, முழுவதும் இரும்பினால் செய்த மேசை, இம்போர்டட் வுட்டன் மேசைகள் எனப் பல ரகங்களில் அழகழகான மேசைகள் வந்துள்ளன.
Tags:    

Similar News