லைஃப்ஸ்டைல்
பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா?

பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா?

Published On 2019-09-28 05:09 GMT   |   Update On 2019-09-28 05:09 GMT
பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா? என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது.

அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.

குழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

குழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.

குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News