லைஃப்ஸ்டைல்
இப்படி தலை, கைகளை வெளியே நீட்டக்கூடாது.

குட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது

Published On 2019-08-23 02:53 GMT   |   Update On 2019-08-23 02:53 GMT
குட்டீஸ் பயணத்தின்போது எப்படி சமர்த்தாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது பற்றி கொஞ்சம் பார்ப்போமா?...
குட்டீஸ்... காரில் பயணிப்பது உங்களுக்கு ஜாலியான அனுபவம்தானே. காரில் முன்னாடி உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது எல்லோருக்கும் குஷியானதுதான். அப்படி ஜாலியான நேரத்தில் நீங்கள் சேட்டை செய்வீர்களா? சுட்டிபையன் ஒருவன் அப்படி ஒருமுறை பயங்கர சேட்டை செய்து கார் ஓட்டும் மாமாவிடம் திட்டு வாங்கியிருக்கிறான். அவன் டிரைவர் செய்வதுபோல கியரைப் பிடித்து இழுத்துவிட்டான். உடனே அவனது அப்பா, அவனை தலையில் கொட்டு வைத்து, ‘கொஞ்ச நேரம் சும்மா வரமாட்டே’ என்று அதட்டி வைத்தார். நீங்களும் அவன்போல சேட்டை செய்ய மாட்டீர்கள்தானே. பயணத்தின்போது எப்படி சமர்த்தாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது பற்றி கொஞ்சம் பார்ப்போமா?...

* காரில் பயணிக்கும்போது குழந்தைகளான நீங்கள் பின் இருக்கையில் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காரின் முன்பக்கத்தில் அமராமல் இருப்பது நல்லது. அப்படியிருந்தால் சேட்டைகளெல்லாம் செய்யக்கூடாது.

* காரில் அமரும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதை எப்படி அணிய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்போ நீங்க சமர்த்துதான். தெரியாவிட்டால் பெற்றோரிடம் கேட்டு மாட்டிப் பழகுங்கள். அம்மா அப்பா சொல்வதுபோல அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணத்தை ஜாலியாக கழியுங்கள்.

* சீட்டில் அமர்ந்திருக்கும்போது வேடிக்கை விளையாட்டுகள் வேண்டாம். முன்பக்க இருக்கையை காலால் மிதித்துக் கொண்டிருப்பது, இருக்கையின் பஞ்சு பகுதியை நகத்தால் கீறி விளையாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கதவு மற்றும் இடுக்கு பகுதிகளில் விரல்களை விட்டு விளையாடக்கூடாது.



* கதவை மூடியிருக்கும் விசைகளை (லிவர்) பிடித்து இழுத்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கதவு திறந்து கொண்டால் வீண் விபத்துகளை ஏற்படுத்திவிடும். நீங்கள்கூட தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது என்பதால் இதுபோன்ற சேட்டைகளை தவிர்க்க வேண்டும்.

* பயணங்களின்போது தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை பருகினால் கவனமாக இருக்க வேண்டும். அவை கொட்டிவிட்டால் உடை மற்றும் கார் இருக்கை பாழாகிவிடும்.

* அதேபோல தின்பண்டங்களை சாப்பிட்டாலும் கவனமாக இருக்க வேண்டும். தின்பண்ட துணுக்கு மற்றும் உணவுத் துணுக்குகளை காரினுள் கொட்டிவிட்டால் எலிகள், பூச்சிகள் அவற்றை சாப்பிடுவதற்காக காருக்குள் வந்துவிடும் வாய்ப்பு உண்டு. அவை வெளியேறாமல் காரிலேயே தங்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். எனவே அவை அடுத்தடுத்த பயண நேரத்தில் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.

* பயணங்களின்போது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். குஷன் சீட்டுகள் குஷியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு குதித்து விளையாடக்கூடாது. பயணங்களின்போது இப்படிச் செய்தால் நிலைதடுமாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. தலையில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

* தூக்கம் வந்தால் படுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீட் பெல்ட் அணிந்து சீட்டில் சாய்ந்து உறங்க வேண்டும்.

* முன் இருக்கையில் அமர்ந்தால் மேலும் கவனமாக இருக்க வேண்டும். அது காரை இயக்கும் பகுதி என்பதால் அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது.



* கார் பயணம் என்றாலே, உங்களைப்போலவே பலருக்கும் முன்னால் அமர்ந்து பயணிப்பதுதான் பிடிக்கும். ஆனால் சுட்டி பையன் அமைதியாக இருக்க மாட்டான். ஏ.சி. எந்திரத்தின் விசிறி துவாரங்களில் விரலை நுழைப்பது, முன்னால் உள்ள சி.டி.பிளேயர், மேப் சாதனத்தை தொட்டுப் பார்க்கும் ஆவலில் செயல்படுவது, கியரை பிடித்து அசைத்துப் பார்ப்பது எல்லா சேட்டைகளையும் செய்வான். அதனால்தான் டிரைவர் மாமாவிடமும், அப்பாவிடமும் திட்டு வாங்கினான். இனிமேல் உன்னை முன்னால் அமர வைக்க மாட்டேன் என்று அவனது அப்பா கடிந்து கொண்டார். அதற்குப் பின்தான் அவன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். நீங்களும் முன்னால் அமர்ந்தால் சுட்டிபையன் செய்த சேட்டைகளை செய்யக்கூடாது.

* கண்ணாடியை திறந்துவிட்டு, கைகள் தலையை வெளியே நீட்டி குதூகலித்தவாறு பயணிக்கக்கூடாது.

* பயணங்களுக்கு முன்னதாக இயற்கை உபாதைகளை கழித்துவிட்டுச் சென்றால் பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

* பயணங்களுக்குத் தேவையான உடைகள், உணவுகள், கருவிகள் என எல்லாவற்றையும் சரியாக எடுத்து வைத்திருக்கிறோமா? என்பதை ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டு பயணத்தை தொடங்குங்கள். எல்லாவற்றையும் அம்மா எடுத்து வைத்திருப்பார் என்று அவசர கோலத்தில் வண்டியில் ஏறிவிடாதீர்கள்.

இனி காரில் பயணம் போனால் கலாட்டா செய்யாத சமர்த்து குட்டீஸ்களாகத்தானே இருப்பீர்கள்? வெரி குட்.! 
Tags:    

Similar News