லைஃப்ஸ்டைல்

குழந்தைகள் உயரமாக வளர உதவி செய்பவை

Published On 2016-10-08 02:06 GMT   |   Update On 2016-10-08 02:06 GMT
குழந்தைகள் உயரமாக வளர என்ன வழிமுறைகளை செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணெய், வைட்டமின் ஏ, டி மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்தக் கூடியவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.

உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவு நிலையில் தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.

குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோன்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக சத்தான உணவுடன் உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

Similar News