லைஃப்ஸ்டைல்

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்

Published On 2016-07-07 05:12 GMT   |   Update On 2016-07-07 05:12 GMT
தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும்.
பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.

அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.
 
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.

அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி.,  தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

Similar News