லைஃப்ஸ்டைல்

பெண்கள் பாதுகாப்பாக எப்படி வெளியூருக்கு பயணம் செய்யலாம்

Published On 2016-05-06 06:27 GMT   |   Update On 2016-05-06 06:27 GMT
பெண்கள் வெளியூருக்கு தனியாக பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்
தற்போது தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.

இன்றைக்கு இருக்கும் நிலையில் காய்கறி வாங்க வெளியே போகும் பெண்களே அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் 500, 600 கிலோமீட்டர் பயணம் செய்யும் பெண்கள் சில ஆண்களிடம், புதியவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

பெண்கள் எல்லா இடங்களுக்கும் எப்படி தனியாக பயணம் செய்வது என்பதற்கு சில டிப்ஸ்...

பெண்களை வெளியூர்களுக்கு சென்று தங்க நினைக்கும் போது குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதை விட பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். இதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் மற்ற விஷயங்கள் எல்லாம் ஆண்களை போல பெண்களும் எளிமையான முறையில் கையாள முடியும்.

பெண்கள் பயணத்தின் போது பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்களருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்பு வைத்துக்கொள்வது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.

தேவை இல்லாமால் எந்த புதிய மனிதரிடமும் எதுவும் பேச வேண்டாம். அப்படியே பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் இடமும், நேரமும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கவனம் தேவை. அதோடு யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாக கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை.

நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் சகபயணிகளோடு நட்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல், எல்லோர் மேலும் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். அதுமட்டுமல்லாமல் மிளகு தெளிப்பான் (பெப்பர் ஸ்ப்ரே), விசில், பிளாஸ்டிக் கத்தி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவைதவிர எங்கு செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

Similar News