- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெருங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும், திருவிழாக்களும் நடைபெற, வேதங்கள் கற்ற அந்தணர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே!
வளைந்த நெருக்கமான இலைகளை உடைய பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாக கொண்டு நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தினை விரும்பியதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!