வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
- சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.
- 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம்.
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த மாதம் 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.தேரோட்டத்தை யாழ்பானம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், குருகுலம் நிர்வாகிகள் வேதரத்தினம், கேடிலியப்பன் கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு தியாகேசா., மறைகாடா.. என பக்தி கோஷம் மூழங்க வடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.