வழிபாடு

வல்லக்கோட்டை திருத்தலத்தின் தொன்மையான திருப்பெயர்

Published On 2022-06-15 13:36 IST   |   Update On 2022-06-15 13:36:00 IST
  • ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாக கொலுவிருக்கின்றான்.
  • இத்தலம், அருணாகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களை பெற்ற பெருமையுடையது.

ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாக கொலுவிருக்கின்றான். எங்கே உள்ளது இந்த கோடை நகர்? என்கிறீர்களா? நமது வல்லக்கோட்டை திருத்தலத்தின் தொன்மையான திருப்பெயர்தான் கோடை நகர். இத்தலம், காலத்தால் மிகத் தொன்மையானது, அருணாகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களை பெற்ற பெருமையுடையது.

தனது பாக்களில் வல்லக்கோட்டையை கோடை நகர் என்றுதான் குளிர் தமிழில் குறிப்பிடுகின்றார் அருணாகிரியார். குமரன் குடி கொண்டுள்ள கோவில்களுக்கெல்லாம் சென்று திருப்புகழ் பாடி மகிழ்வதைத் திருத்தொண்டாக செய்தவர் அருணகிரி. இவர் எந்த தெய்வத்திடமும் வெறுப்பில்லாத அத்வைதஞானி. என்றாலும் முருகப்பெருமானிடம் மட்டுமே முதிர்ந்த காதல் உடையவர். ஒரு சந்தர்ப்பத்தில் திருப்போரூர் வந்த அருணகிரியார், அங்கேயே தங்கி கந்தக் கடவுளுக்கு மலர்களாலும், மனம் மிகு பாக்களாலும் ஆராதனை நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பிறகு திருத்தணி சென்று வேலவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்த, தணிகை நோக்கி பயணிக்க முடிவு செய்தார்.

அன்றிரவு குமரன், அருணகிரிநாதரின் கனவில் தோன்றி, கோடை நகருக்கு வருக என்று அழைப்பு விட்டான். காலையில் எழுந்த அருணகிரி நாதர், தன்னை சொந்தம் கொண்டாடும் கந்தன் கருணையை எண்ணி கண்ணீர் மல்கினார். உடனே வழி விசாரித்துக் கொண்டு கோடை நகர் வந்து சேர்ந்தார்.

வள்ளியும்-தெய்வானையும் இரு புறத்திலும் விளங்க, சுமார் ஏழடி உயரத்துடன் காட்சி தரும் முருகப்பெருமானை கண்டு உள்ளம் உருகினார். திருப்புகழ் பாடிப் பரவினார். எட்டு திருப்புகழ் பாடல்களை, முருகப்பெருமான் மீது பாடி இத்தலத்தில் அர்ப்பணித்தார்.

இன்று வல்லக்கோட்டை எனப்படும் கோடை நகர், பெரும்புகழ் வாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்கு வைகாசி விசாகப் பெருவிழாயொட்டி புஷ்பப் பல்லக்கில் சுப்பிரமணியசுவாமி சேவை சாதிப்பார்.

திருக்கல்யாண உற்சவம் நிறைவேறியதும் அதிகார மயில் சேவை நடைபெறும். அனைவரும் வைகாசி விஜயனின் விவாகத் திருக்காட்சியையும், அதிகார மயில் புறப்பாட்டையும் கண்டு ஆனந்தத்தையும், அருளையும் பெறலாம்.

Tags:    

Similar News