வழிபாடு

உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: இன்று மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு 4 நாட்கள் தரிசனம்

Published On 2025-04-01 11:30 IST   |   Update On 2025-04-01 11:30:00 IST
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ந்தேதி கும்பாபிஷேகம்.
  • இன்று மாலை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேசு வரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது இன்று மாலை திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.

இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்புகளையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். தொடர்ந்து 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது.

கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 2-வது நாளாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அன்று திரு உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News