வழிபாடு
null

இன்று பவுர்ணமி... குலதெய்வத்தை வழிபடுவோம்! எல்லா வளமும் பெறுவோம்!

Published On 2025-07-10 11:13 IST   |   Update On 2025-07-10 12:01:00 IST
  • குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும்.

குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. பவுர்ணமி வழிபாடு குடும்பத்தில் உள்ள தீய சக்திகளை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும் பவுர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பவுர்ணமி நாளில் குல தெய்வத்தை வழிபடுவதால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொறு பவுர்ணமிக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலமிட்டு, குல தெய்வத்தின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, நெய் தீப விளக்கேற்றி குடும்ப சகிதமாக குல தெய்வத்தை மனதார வழிபடலாம். தீபமேற்றியவுடன் குல தெய்வத்தின் பெயரை 108 முறை பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். பின்னர் நைவேத்தியமாக வெண்பொங்கல் (அ) சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். படைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். எளிய முறையில் இப்படி குல தெய்வ வழிபாடு செய்தாலே போதும் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ஒவ்வொறு பவுர்ணமியிலும் மாலை நேரத்தில் சந்திர பகவான் தோன்றும் நேரத்தில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீடு மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.



உங்கள் முன்னோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தால், அதனால் பல இன்னல்களை பிள்ளைகள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும். ஏதேனும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றால், விடுபட்ட பவுர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் தொடர்ச்சியாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும் அதனால் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் பல இன்னைல்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பவுர்ணமி தினத்தில் தீபமேற்றி, அந்த தீபத்தை குல தெய்வமாக வழிபட, குல தெய்வ அருள் கிடைக்கும். நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி அவர்களின் வாழ்வும் வளம் பெரும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News