வழிபாடு

அப்பூதி அடிகள் குருபூஜை இன்று

Published On 2024-02-11 10:16 IST   |   Update On 2024-02-11 10:16:00 IST
  • வடகரைத் திருத்தலமாக விளங்குகிறது திங்களூர்.
  • திருநாவுக்கரசர் திருப்பாதங்களில் சிறுவனோடு விழுந்து பணிகின்றார்கள்.

கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாறுக்கு அருகே காவிரியின் வடகரைத் திருத்தலமாக விளங்குகிறது திங்களூர். அங்கே வாழ்ந்து வந்தார் அப்பூதி அடிகள். சமய குரவர்களில் அப்பர் என்ற திருநாமம் உடைய திருநாவுக்கரசர் மீது காணாமலே காதல் கொண்டு அவர் பெயரிலேயே தர்மங்கள் பலவற்றைச் செய்துகொண்டிருந்தார். அவரை ஒருமுறை சந்திக்கிறார். திருநாவுக்கரசரைக் கண்டதும் ஏக மகிழ்ச்சி. ஒப்பற்ற ஞான தரிசனம் கிடைத்த பூரிப்பு.

நெகிழ்கிறார். நெக்குருகி நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குகிறார். வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கிறார். திருநாவுக்கரசரும் அன்புக்கு கட்டுப்பட்டு ஏற்கிறார். விருந்து தயாராகிவிட்டது.

விருந்துக்கு முன் வாழை இலை அறுக்க செல்கிறான் அப்பூதியடிகளின் மகன். அங்கே மறைந்திருந்த பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். அழுவதற்கும் நேரமில்லை. விருந்து கெடுமே. திருநாவுக்கரசர்வெளியே சென்று வீட்டுக்கு வரும் நேரம். அவர் அறிந்தால் கஷ்டப் படுவார்…. என்ன செய்வது?

பிள்ளையின் சடலத்தை ஒரு பாயை வைத்து கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு திருநாவுக்கரசரின் வருகையை எதிர்நோக்கி விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தயங்காமல் செய்கின்றனர்.

திருநாவுக்கரசரும் வந்துவிட்டார். அழகான வாழை இலையில் அன்னமும் கறிகளும் அழகாகப் பரிமாறி இருக்கும் வேளையில், திருநாவுக்கரசர் பூசனைகள் புரிந்து வெண்ணீறு பிரசாதமாக இருவருக்கும் தந்து, ''ஆமாம், இங்கே விளையாடிக் கொண்டிருந்த தங்கள் புதல்வன் எங்கே? கூப்பிடுங்கள். என்னோடு விருந்து உண்ணட்டும்'' என்று கேட்கும் போதுதான், அதுவரை இல்லாத மயக்கம் வருகின்றது.

''சுவாமி அவன் தங்களுக்கு இப்போது உதவான்'' அவன் இறந்துவிட்டான் என்று சொல்லவில்லை. ஒரு கணம் திகைத்தார் திருநாவுக்கரசர் ''ஏன்?'' இப்போதுவரை இங்கு விளையாடிக் கொண்டிருந்தான்… அவன் எங்கே? உண்மையைச் சொல்லும்''. பெரியவரின் விருந்திற்கு விரோதம் வரும் என்று சொல்லியாக வேண்டிய நிலை. நடந்த கதையைச் சொன்னார்கள்.

''நல்லது செய்தீர் ஐயா, நல்லது செய்தீர். இந்த வயோதிகனுக்கு விருந்து படைக்க வேண்டும் என்று வயசுப் பிள்ளையைப் பறிகொடுத்து, அதனை மறைத்துக் கொள்ளும் துணிவா? யாராவது இப்படிச் செய்வார்களா? அவனை இங்கே கொண்டு வாருங்கள். நீலம் பாரித்துக் கிடந்த பிள்ளையை கொண்டு வந்து கிடத்துகிறார்கள். அடுத்து அவர் உதட்டிலிருந்து பரம கருணையோடு வெளிப்படுகின்றது ஒரு பதிகம்.

"ஒன்று கோலாம் அவர் சிந்தை உயர் வரை

ஒன்று கோலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கோலாம் இடு வெண்தலைகையது

ஒன்று கோலாம் அவர் ஊர்வது தானே''

விடம் தீர்க்கும் பதிகம் என்பார்கள். திருநாவுக்கரசரின் தமிழமுதம் அந்த பச்சிளம் பாலகனைக் காத்தது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து வந்து பெற்றோர்களைக் கட்டிக் கொள்கின்றான். திருநாவுக்கரசர் திருப்பாதங்களில் சிறுவனோடு விழுந்து பணிகின்றார்கள். இன்று அப்பூதி அடிகளாரின் குரு பூஜைநாள்.

Tags:    

Similar News