வழிபாடு

திருப்பாவை-திருவெம்பாவை: மார்கழி முதல் நாள்

Published On 2023-12-17 05:50 GMT   |   Update On 2023-12-17 05:50 GMT
  • ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே இது மார்கழி மாதம்.
  • ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி

பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே ! இது மார்கழி மாதம். முழு நிலவு ஒளி வீசும் நாள். இந்த நாளில் நீராடச்செல்வோம். கூர்மையான வேல் உள்ளவனும், பகைவர்களுக்கு கொடுமை செய்பவனும் ஆன நந்தகோபனின் குமாரன், அழகு நிறைந்த கண்களைக் கொண்ட யசோதை பிராட்டிக்கு இளம் சிங்கம் போன்றவன், கார்மேகம் போன்ற உடல் அமைந்தவன், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று பிரகாசிக்கும் முகத்தையும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், நாம் விரும்பிய வரத்தைத் தருவான். அதனால் உலகத்தார் அனைவரும் புகழும் வண்ணம் நீராடி மகிழ்வோம்; வாருங்கள்!

திருவெம்பாவை

பாடல்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்

கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

விளக்கம்

ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி! தொடக்கமும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான். ஒளிவடிவான அவனைப்பாடினோம். அந்த பாடலைக் கேட்ட பின்பும் நீ உறங்குகின்றாயே. உன்னுடைய காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? சிலம்பணிந்த இறைவனின் திருப்பாதங்களை நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்ட ஒருத்தி, அவன் நினைவில் விம்மி விம்மி அழுது தன்னை மறந்தாள். பின்னர் மலர் படுக்கையில் இருந்து புரண்டு எழுந்து, எதுவும் செய்யமுடியாமல் விழுந்து விட்டாள். இறைவனிடம் அவள் கொண்ட பக்தி நிலை அப்படியானது. ஆனால் எங்கள் தோழியாகிய நீயோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இனியாவது எழுந்து வந்து இறைவனைப் பாடுவாய்.

Tags:    

Similar News