வழிபாடு

பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

Published On 2022-07-24 02:50 GMT   |   Update On 2022-07-24 02:50 GMT
  • மங்கல பொருட்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.
  • பட்டு வஸ்திரங்கள், மங்கல பொருட்களை திருத்தணி கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகையான நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணியில் நடந்தது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சகிதமாக வந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு, பழம், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்களை மூங்கில் தட்டுகளில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.

பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை திருத்தணி முருகன் கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார். அந்தப் பட்டு வஸ்திரங்கள் உற்சவர்களான வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அறங்காவலர் குழு தலைவரும், அவருடைய மனைவியும் மூலவர் மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருத்தணி முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர். முன்னதாக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News