தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்
- அரங்கனைத் தவிர, யாரையும் பாடாத ஆழ்வார் ஒருவர் உண்டு.
- திவ்யதேச பெருமாளையும் பாடிய ஆழ்வாராகிறார்.
ஆழ்வார்களிலேயே அரங்கனைத் தவிர, வேறு யாரையும் பாடாத ஆழ்வார் ஒருவர் உண்டு என்றால் அவர் தொண்டரடிப்பொடியாழ்வார். ஆனால், இதில் ஒரு நுட்பம் உண்டு. அரங்கன் எல்லா திவ்ய தேசங்களுக்கும் மூலமாக இருப்பவன். 108 திவ்ய தேசத்து எம்பெருமானும் அரங்கத்தில் வந்து கலைகளாக இணைகிறார்கள் என்கின்ற கருத்தும் உண்டு.
கோவில் என்றால் வைணவத்தில் திருவரங்கம்தான். அதுவே, "தலைமைக் கோயில்" என்று சொல்லப்படுகின்றது. பூலோக வைகுண்டம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இவர் அரங்கனை மட்டும் பாடியிருந்தாலும், அனைத்து திவ்யதேச பெருமாளையும் பாடிய ஆழ்வாராகிறார்.
கும்பகோணம் அருகில் மண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவர் எழுதிய பிரபந்தம் இரண்டு. ஒன்று திருப்பள்ளியெழுச்சி. இது தினசரி காலையில் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் வைணவ வீடுகளிலும் பூஜையில் பாடப்படுவது. மற்றொரு பிரபந்தம் திருமாலை. 45 பாடல்கள். தத்துவ நுட்பங்கள் செறிந்தது. தன்னுடைய பெயரைக்கூட வைணவ அடியாருக்கு அடியார் என்ற பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர். அவதாரம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்தது.