வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-03-26 13:34 IST   |   Update On 2023-03-26 13:34:00 IST
  • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
  • 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்த போதிலும், இந்த கோவிலுக்கு உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா போற்றப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.

திருவிழா முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர்கள் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.

நாளை (27- ந்தேதி) விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் விதவிதமான வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்கார லீலையும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News