வழிபாடு
திருச்செந்தூர் கோவிலில் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்படும் தனிப்பாதை.

திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை விரைவில் நடைமுறைக்கு வருகிறது

Published On 2022-06-27 05:02 GMT   |   Update On 2022-06-27 05:54 GMT
  • திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
  • மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

பக்தர்கள் வசதிக்காக திருப்பதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஏற்கனவே அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திரள்வதால் சுவாமி தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கோவில் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மூத்தகுடிமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 60 வயதை கடந்த மூத்தகுடிமக்கள் இந்தவழியாக சென்று தரிசனம் செய்யலாம்.

இந்த பாதையில் செல்லும் முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றின் ஏதாவது ஒரு அட்டையின் அசல் சான்றிதழை காட்டிவிட்டு இந்த வழியாக செல்லலாம்.

இந்த நடைமுறை விரைவில் வர உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News