வழிபாடு

தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-10-06 05:16 GMT
  • திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது.
  • இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை, மாலை வேளையில் சாமி வெவ்வேறு வாகனத்தில் வீதிஉலா வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் தேசிகர் எழுந்தருளினார்.

இதையடுத்து டிராக்டர்கள் மூலம் தேர் இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து நேற்று திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் எழுந்தருளினர். பின்னர் யோக நரசிம்மர் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கீழே கொண்டுவரப்பட்டு பெருமாள், ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார், ராஜகோபாலன், பள்ளிகொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார், பாஷியக்காரர் ஆகிய சன்னதிகளில் தேசிகர் நேரில் சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் பெருமாள், தாயார் தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் சாற்று முறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News