வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தபோது எடுத்தபடம்.

கன்னியாகுமரியில் இன்று பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-06-01 05:08 GMT   |   Update On 2023-06-01 05:08 GMT
  • உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர்.
  • வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக திருவிழா நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தது.

அதன்பிறகு 9 மணிக்கு திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரை பக்தர்கள் கீழரதவீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்து தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் கொண்டு வந்து பகல் 12.30 மணிக்கு நிலையை வந்தடையும். வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானக்காரம், மற்றும் குளிர்பானங்கள் தானமாக வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், காஞ்சிதர்மமும் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கி நடை பெற்றது.

Tags:    

Similar News