அன்பின் உச்சக்கட்டம் `புனித வெள்ளி'
- தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார்.
- கடவுள், மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார்.
உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள், சிலுவையில் அறையப்பட்டு இயேசு மரித்த நாளை புனித வெள்ளி (இன்று) யாக அனுசரிக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு யார்? அவர் எதற்காக தன் உயிரைக் கொடுத்தார்? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான காரணத்தைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இறைவன் இந்த உலகைப் படைத்தார். தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார். அந்த மனிதனை, தன் சாயலில் இருக்கும்படியாகவே உருவாக்கினார். ஆனால் மனிதனோ, இறைவன் செய்த நன்மைகளை மறந்து வழிதவறிச் சென்றான்.
இதை அறிந்த கடவுள், அவனை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்கள் சொன்னதையும், மனிதர்கள் கேட்கவில்லை. எனவே கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இதனையே ``கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பும் அளவுக்கு உலகின் மீது அன்பு கூர்ந்தார்" என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.
மனிதர்களை நல்வழிக்கு திருப்பும் இந்த திட்டப்படி, இயேசுவானவர் கன்னி மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் கருவுற்றார். பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். நாசரேத்தில் வளர்ந்து பொதுப்பணி செய்தார். அதுவும் தேவையில் இருக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவினார். 'சிறைபட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும்' தன்னை அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். சட்டத்தை தூக்கிப் பிடித்த யூத சமூகத்தினரிடம், மனிதத்தை மையப்படுத்தும்படி வலியுறுத்தினார். அதனால் யூதர்களின் பெரும் எதிரியாக சித்தரிக்கப்பட்டார்.
தன்னோடு இருந்த சீடர் ஒருவரால், காட்டிக் கொடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக இயேசு, தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவினார். இதன் மூலம் 'பணிவிடை பெறுபவன் அல்ல.. பணிவிடை புரிபவனே தலைவன்' என்ற தத்துவத்தை முன்னிறுத்தினார்.
இயேசுவை கைது செய்தவர்கள், அவர் தலையில் முள் கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்தனர். அப்போது பல அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து, இயேசுவை துன்புறுத்தினர்.
ஆனால் இயேசு, அவை அனைத்தையும் கோபம் கொள்ளாது ஏற்றுக்கொண்டதுடன், "தந்தையே.. இவர்களை மன்னியும்" என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். இயேசு, தன்னுடைய உச்சக்கட்ட அன்பை வெளிப்படுத்திய தருணம் இது.
பிலாத்து என்பவன் இயேசுவிடம் , "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"என்று பதில் கூறினார் (யோவான்: 18:37). இவ்வாறு மக்களிடையே இருந்த ஒவ்வொரு தருணத்திலும், உண்மையை மக்களுக்கு அறிவித்தபடியே இருந்தவர் இயேசுபிரான்.
அன்பால் மக்களை தன்வசப்படுத்தி, உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு ஒரு புரட்சியாளர். அவரை பின்பற்றும் நாமும் உண்மையின் பக்கம் நிற்போம்!
பகைவரையும் அன்பு செய்வோம்! அதுதான் இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்ட, 'புனித வெள்ளி' தினத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.