வழிபாடு

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதிதரிசனம் நடந்த காட்சி.

வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-02-05 03:41 GMT   |   Update On 2023-02-05 03:51 GMT
  • வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது.
  • காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது, 31-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

நேற்று (4-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீ ரால் விளக்கு எரித்த கருங்குழி யிலும். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தி லும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது, இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

தைப்பூச திருவிழாவை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர், மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள் மாவட்ட அறநிலையத் துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் ஜோதி தரிசனம் பார்த்தனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி நாளை காலை 5.30 மணிக்கும் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 7-ந் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடை பெற உள்ளது.

அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழி பாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி. நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவினை முன்னிட்டு 700 போலீசார், 200 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News