வழிபாடு

நாளை திருவாசகம் படியுங்கள் - அளவற்ற புண்ணியம் கிடைக்கும்...

Published On 2025-06-28 12:44 IST   |   Update On 2025-06-28 12:44:00 IST
  • திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
  • அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார்.

மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் கோவிலை கடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் 'திருவாதவூரார்' என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.

சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை பாண்டிய மன்னர் அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்கி வழிபட்டார். அப்போது அங்கு அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார்.

அந்த சமயத்தில் வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், "உன் சொற்கள் மாணிக்கத்தை விட மதிப்புமிக்கவை. இனி நீதி மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்" என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன் பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பொன் பொருட்களை திருப்பெருந்துறை ஆலய திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.

நாட்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்க வாசகர். அப்போது, "ஆடி மாதம் முடிவடைதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அடி" என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.

வனத்தில் இருந்து நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னார். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. இதை கண்ட பாண்டிய மன்னர் தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று கடும் கோபம் கொண்டார். மாணிக்க வாசகரை வைகை நதியின்சுடு மணலில் நிறுத்தி மரணத்தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

தவறை உணர்ந்த மன்னர் மாணிக்க வாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். ஆனால் மாணிக்க வாசகர் அதை நிராகரித்து விட்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கு தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாடினார். அதை ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர் அவர் 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி ஓலைகளைக் கீழ் வைத்து மறைந்தார்.

இதன் மூலம் அந்தப் பாடல்களை சிவபெருமானே விரும்பி எழுதி கொடுத்தது என்பது உறுதியானது. இந்த பாடல்கள்தான் திருவாசகம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.

எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும் போதும் படிக்கும் போதும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர்.

திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?

திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும்.

இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.

திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமின்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. இதனால்தான் மாணிக்கவாசகரை வழிபட சொல்கிறார்கள்.

மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.

திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்டதற்கு மாணிக்கவாசகர் அளித்த பதில், நடராஜரா என்பது தான். மாணிக்கவாசகர், சிவபெருமானுடன் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம். திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.

மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும்.

அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.

மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியாவிட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும்.

அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். இது அளவற்ற புண்ணியத்தைத் தேடித் தரும்.

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.

திருவாதவூர் மாணிக்க வாசகர் கோவில் 92-ம் ஆண்டு ஆனி மகவிழா நாளை (29.6.2025) காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. திருவாதவூர் வேதநாயகி சமேத திருமறைநாதர் கோவிலில் இருந்து மாணிக்கவாசக பெருமான் புறப்பாடாகி அவர் பிறந்த வீட்டிற்கு எழுந்தருகிறார். தொடர்ந்து மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறும்.

மதுரையில் இருந்து திருவாதவூர் செல்ல பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எண்: 66 பி, எச், ஜே. எம் ஆகிய பேருந்துகளும், மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் செல்லும் பேருந்திலும் (7, 7 ஏ, 7 சி) பயணிக்கலாம். ஒத்தக்கடையில் இருந்து மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News