வழிபாடு

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்.

மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Published On 2022-09-25 04:10 GMT   |   Update On 2022-09-25 04:10 GMT
  • பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.
  • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப அபிவிருத்தி உண்டாகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை தினம் இன்று (25-ந்தேதி) என்பதால் ராமேசுவரத்தில் நேற்று முதலே பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.

இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் ராமேசுவரம் திருவிழா கோலம் பூண்டது.

தர்ப்பண வழிபாடு மட்டுமின்றி பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் குளித்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் ஜோதிர்லிங்கம் சன்னதியில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரத்துக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடிநீர் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு சுகாதாரத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. மேலும் இந்த மலையில் பல சித்தர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.

சதுரகிரியிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரியிலும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மற்றும் வைகை ஆற்றாங்கரைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News