வழிபாடு

முத்தால பரமேசுவரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா தொடக்கம்

Published On 2023-02-11 06:26 GMT   |   Update On 2023-02-11 06:26 GMT
  • இந்த விழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
  • 18-ந்தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம் ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மக்களுக்கு புராதன பாத்தியமானதும், ஆயிர வைசிய மகா சபை, தர்மதவள விநாயகர். முத்தால பரமேசுவரி, ஆதிரெத்தினேசுவரர் வகையறா தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ளதுமான முத்தால பரமேசுவரி அம்பாள் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, மகா கணபதி மற்றும் நவக்கிரக வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

இதேபோல தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி அம்பாள் தேரோட்டமும், 19-ந்தேதி ஆதிரெத்தினேசுவரர் கோவில் திருக்குளத்தில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 20-ந்தேதி பால்குடம் ஊர்வலமும், அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். தினமும் அம்பாளுக்கு உபயதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சரவணன், அறங்காவலர்கள் ஞானசேகரன், சாந்தமூர்த்தி, ஆயிர வைசிய மகாஜன சபை தலைவர் கவுன்சிலர் ஜெயராமன், பொது செயலாளர்கள் ஜெயக்குமார், நாகராஜன், பொருளாளர்கள் சசிக்குமார், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், தேவஸ்தான குழுவினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News