வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா: நாளை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2023-04-03 14:35 IST   |   Update On 2023-04-03 14:35:00 IST
  • கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
  • சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல நாளை இரவு முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது

தென்மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் தங்களது குல தெய்வமான சாஸ்தாவை குடும்பத்துடன் சென்று வழிபட்டுவது வழக்கம்.

குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.

இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோவிலில் சுவாமியின் பூடங்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோவில்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பந்தல் போடுதல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை நடக்கிறது. இதனையொட்டி கோவில்களில் நாளை காலை முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜை களும், அன்னதானங்களும் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை விமரிசையாக நடக்கிறது.

தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து முந்தைய நாளே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள்(புதன்கிழமை) அங்கு பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

இதற்காக நாளை இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உள்மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News