வழிபாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று நம்பெருமாள், ரெங்கநாச்சியார் சேர்த்திசேவை

Published On 2025-04-11 14:04 IST   |   Update On 2025-04-11 14:04:00 IST
  • ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள்.
  • ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் 7-ம்நாள் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று நம்பெருமாள் குதிரை வாகனத்தில் கோரதம் அருகே வையாளி கண்டருளுளினார்.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடை பெற்றது. இதை யொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார்.

அங்கு ஏற்கனவே நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாரை சென்று சந்தித்தால் ரெங்க நாச்சியார் கோபம் அடைந்து கதவை சாத்திக்கொள்ளலும், பின்னர் மட்டையடி உற்சவமும் நடைபெற்றது.

பின்னர் இந்த ஊடலை நம்மாழ்வார் சமரசம் செய்ய நம்பெருமாள் சமாதானம் கண்டருளி முன்மண்டபம் வந்து சேந்தார். பின்பு ஏகாந்தம் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இந்த வேளையில் மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார்.

பின்னர் பெருமாளும், தாயாரும் சேர்த்தி சேவை அருளினர். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர்.

தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதியவர்கள், குழந்தைகள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சேர்த்தி சேவைக்கு பக்தர்கள் செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதியையும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேர்த்தி மண்டபம் வரை குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஒரு இடத்தில் மிகப்பெரிய ஏர் கூலரும், தாயார் சன்னதி முன் மண்டபத்தில் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருந்தது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில் களும், நீர்மோர் மற்றும் பிரசாதம் வழங்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் நம்பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விழாவையொட்டி இன்று இரவு 10.30 மணி வரை பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப் பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் அதிகாரி கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News