வழிபாடு

காத்தான்வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2023-05-31 04:20 GMT   |   Update On 2023-05-31 04:20 GMT
  • இன்று 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாகபூஜை நடக்கிறது.
  • நாளை 4-ம் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவில். இங்கு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. சிற்பி செந்தில் தலைமையிலான சிற்ப கலைஞர்கள் திருப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, தன பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

இன்று(புதன்கிழமை) 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாகபூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நாளை 4-ம் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை 8.5 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கடங்கள் புறப்பாடாகி 8.15 மணி அளவில் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி பகல் 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 2-ந்தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கருப்பையா சுவாமிகளின் குடும்பத்தினர் மற்றும் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News