வழிபாடு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-26)

Published On 2024-01-11 09:25 IST   |   Update On 2024-01-11 09:25:00 IST
  • ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே!
  • முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே!

திருப்பாவை

பாடல்

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்கமுரல்வன

பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

திருமாலே! மணிவண்ணனே! மார்கழி மாதத்தில் நோன்பு நோற்கும் முறைகளை பற்றி நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். அதற்கான பொருட்களை கேட்பதற்காக வந்தோம். பூவுலகம் நடுக்கம் கொள்ளும்படி முழங்கும் வெண்நிறத்தையுடைய உனது பாஞ்சசன்னியம் என்று சொல்லப்படும் சங்கும், அதைப்போன்ற பிற சங்குகளும் வேண்டும். நீண்டதூரம் சென்று ஒலிக்கின்ற பெரிய முரசுகளும், திருப்பல்லாண்டு பாடுவதற்கு பாடகர்களும் வேண்டும். அழகு பொருந்திய விளக்குகளும், கொடிகளும்,விமானத்தில் கட்டுவதற்கான துணியும், பொருட்களும் வேண்டும். ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே! இவற்றையெல்லாம் எங்களுக்கு தந்து நீ அருள்புரிவாயாக!

திருவெம்பாவை

பாடல்

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின் றார் அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

விளக்கம்

உமையம்மையின் கணவனே! செம்மை நிறம்கொண்ட தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! சாதாரண மக்களும், தவம் செய்து அருள் பெற்றவர்களும், ஆசைகளைத் துறந்தவர்களும், பந்தபாசமே வேண்டாம், அவனே கதி என சரணம் அடைந்தவர்களும், உன்னை உணர்ந்த உன் அடியார்கள் பலரும் கோவிலில் கூடி நிற்கிறார்கள், மனித இயல்புக்கு ஏற்ப மையிட்ட கண்களுடைய பெண்களும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். இந்த பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே! எம்பெருமானே, நீ உன் திருப்பள்ளியில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள்புரிவாயாக.

Tags:    

Similar News