வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-13)

Published On 2024-03-24 04:31 GMT   |   Update On 2024-03-24 04:31 GMT
  • இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)
  • நபி அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண்.

இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தோர்களில் முதன்மையானோர் சிலர். அவரில் ஒருவர் ஆயிஷா (ரலி) ஆவார். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை இரண்டு விதங்களில் அடங்கும்.

1) பொது வெளி வாழ்க்கை,

2) அந்தரங்க வாழ்க்கை.

நபியின் அந்தரங்க வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சமூகப் பார்வைக்கு கொண்டு போய் சேர்த்தவர் தான் ஆயிஷா (ரலி) ஆவார். கி.பி. 614-ல் ஆயிஷா (ரலி) பிறந்தார்கள். இவரின் தந்தை இஸ்லாமிய குடியரசின் முதலாம் ஜனாதிபதி அபூபக்ர் சித்தீக் (ரலி), தாயார் உம்முரூமான் (ரலி) ஆவார். இவருக்கு 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண். மற்ற யாவரும் கைம்பெண்களே!

இவரைக் கூட நபி (ஸல்) அவர்கள் தமது சுயவிருப்பத்தின்படி திருமணம் முடிக்கவில்லை. இறை உத்தரவின் பேரிலேயே திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும்.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்: 'நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இருதடவை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே, நான் அந்தப் பட்டுத்துணியை விலக்கிப்பார்த்தேன். அது நீ தான், அப்போது நான் (மனதிற்குள்) `இக்கனவு இறைவனிடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.' (நூல்:புகாரி)

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அண்ணலார், ஆயிஷா (ரலி) ஆகியோரின் திருமணம் மறுபடியும் சொர்க்கத்திலேயே முடியும். 'ஆயிஷாவே! நான் உன்னை சொர்க்கத்திலும் எனது மனைவியாக அமைவதை கண்டுகொண்டேன் என நபி (ஸல்) கூறினார்கள். ' (நூல்:தப்ரானீ)

'ஒட்டுமொத்த உலகப் பெண்களின் கல்வியை ஒரு தட்டிலும், ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வியை மற்றொரு தட்டிலும் ஒன்று திரட்டப்பட்டால், ஆயிஷா (ரலி) கல்வியே மேம்படும்' என இமாம் ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

அதிகமான நபிமொழிகளை அறிவித்த நபர்களில் நான்காவது இடத்தை ஆயிஷா (ரலி) பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 2210 நபிமொழிகளை அறிவித்துள்ளார். ஒரு சமயம் அன்னை அவர்கள் ஒட்டுப் போட்ட சட்டை அணிந்த நிலையில் 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை தர்மம் செய்தார்கள்.

ஒரு தடவை அவர்களிடம் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய ஒரு லட்சம் வெள்ளிக்காசுகள் வந்தது. அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.

ஒரு தாம்பளத்தை கொண்டுவரச் செய்து அனைத்தையும் வழங்கிவிட்டார்கள். மாலை நேரம் காய்ந்த ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் வைத்து நோன்பு திறந்தார்கள். மற்றொரு சமயம், தன்னிடமுள்ள 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை ஒரே நேரத்தில் இறை வழியில் செலவிட்டார்கள்.

அன்னையார் அவர்கள் கி.பி. 678-ம் ஆண்டு, ஹிஜ்ரி 58-ம் வருடம் ரமலான் மாதம் பிறை 17-ம் தினம் புதன்கிழமை அன்று தமது 66-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.

அன்றைய தினம் அவர்கள் பகலில் நோன்பிருந்து, இரவில் வித்ர் எனும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு உயிர் பிரிந்தது. அபூ ஹுரைரா (ரலி) பிரேத தொழுகை நடத்தினார். பின்பு ஜன்னத்துல் பகீ இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அன்னையார் தமது இறுதிக் காலம் வரைக்கும் இறை தியானத்தில் கழித்து இறைவனடி சேர்ந்தார். அவரது வாழ்வு நமக்கு ஒரு பாடமாகும்.

Tags:    

Similar News