மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
- ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
- எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது.
திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.