வழிபாடு

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் தோஷம் தீர பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-07-27 05:39 GMT   |   Update On 2022-07-27 05:39 GMT
  • பக்தர்கள் தோஷங்கள் தீரவும், வளமான வாழ்வுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
  • வருகிற 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
  • 20-ந்தேதி திருவிழா நிறைவடைகிறது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வரருக்கு அமைந்துள்ள தனி கோவில் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தங்களின் தோஷங்கள் தீரவும், வளமான வாழ்வுக்கும் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான காகம் பொம்மைகளை வாங்கி காணிக்கையாக செலுத்தியும், எள் சாதம் படைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில் அருகில் உள்ள சுரபி நதியில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவில் வருகிற 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 6-ந்தேதி சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக் காப்பு சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதைத்தொடர்ந்து வருகிற 15-ந்தேதி சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது சோணை கருப்பணசாமிக்கு ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களை படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து 20-ந்தேதி திருவிழா நிறைவடைகிறது.

திருவிழா நடக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேனி, சின்னமனூர், தேவாரம், போடி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News