வழிபாடு

அண்ணாமலையார் பாதத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை

Published On 2022-12-26 07:14 GMT   |   Update On 2022-12-26 07:14 GMT
  • சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • கடந்த 6-ந்தேதி மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்பட்டும் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று வந்தனர்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படும்.

அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது.

பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News