வழிபாடு

மீனாட்சி அம்மன் கோவிலில் 6-ந்தேதி லட்சதீபம் ஏற்றப்படுகிறது

Update: 2022-12-02 04:23 GMT
  • திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம் நடைபெறாது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை சுவாமி சன்னதி கொடிமரத்தின் அருகே யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் திருவிழாவிற்கு காப்பு கட்டிய, சங்கர் பட்டர், திருவிழா கொடியினை 10.44 மணிக்கு ஏற்றி வைத்தார்.

அதை தொடர்ந்து புனிதநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது அங்கு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரரேசுவரர் எழுந்தருளினர். பின்னர் 2-ம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவில் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீப தினத்தன்று மாலையில், கோவில் வளாகம், பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள்.

மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்வார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கீரிடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News